வங்கி துறையில் இறங்கும் டிவிஎஸ்.. ஆரம்பமே அசத்தல்.. 500 கோடி உடன் வந்த வேணு ஸ்ரீனிவாசன்!
சென்னை: தமிழ்நாட்டின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான TVS குழுமத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் இந்திய வங்கித் துறையில் நுழைய தயாராகி வருகிறார். இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் டிவிஎஸ் வங்கித்துறையில் நுழைவதற்காக எடுத்திருக்கும் முயற்சி மிகவும் முக்கியமானதாக தொழிற்துறையில் பார்க்கப்படுகிறது. வேணு சீனிவாசன் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் கௌரவத் தலைவர் (Chairman Emeritus) ஆவார்.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் சுமார் 10 சதவீத பங்குகளை வாங்க வேணு ஸ்ரீனிவாசன் திட்டமிட்டுள்ளார். இந்த முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.500 கோடியாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தற்போது வெளியாகியுள்ள தகவல் படி நடந்தால், 2022-ல் TVS குழுமம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு நடக்கும் மிகப்பெரிய வர்த்தக விரிவாக்கமாக இருக்கும்.

ரூ.500 கோடி முதலீடு
வேணு ஸ்ரீனிவாசன் டிவிஎஸ் குழுமத்தின் கீழ் உருவாக்கியுள்ள புதிய நிறுவனமான TVS Venu Management and Consultancy Services Pvt Ltd மூலம் இந்த முதலீட்டை மேற்கொள்ள உள்ளார். ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிர்வாக குழு அடுத்த வாரம் இந்த முதலீட்டுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை இந்திய வங்கித் துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், பெரிய தொழில் குழுமங்கள் வங்கிகளில் பெரிய அளவில் முதலீடு செய்வது என்பது மிகவும் அரிதாகவே நடக்கும் சம்பவமாகும்.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.38 சதவீதம் குறைந்து 486.85 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது.
RBI விதிமுறைகள்
இந்திய வங்கி விதிமுறைகளின் படி, ஒரு தொழில் குழுமங்கள் வங்கிகளை கட்டுப்படுத்துவதை அனுமதிப்பதில்லை. 9.99 சதவீதத்துக்கு மேல் பங்கு வாங்க விரும்பும் முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் (RBI) ஒப்புதலைப் பெற வேண்டும். இதேபோல் இந்த முதலீடு வெறும் நிதி முதலீடாகவே இருக்கும், வங்கி நிர்வாகத்தில் டிவிஎஸ் குழும பங்கு இருக்காது எனவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிதி நிலைமை மேம்படும்.
ஜனா வங்கிக்கு பெரும் பலம்
இந்த முதலீடு ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் மூலதனத்தை சுமார் 22 சதவீதமாக உயர்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வங்கியின் கடன் வழங்கும் திறனை அதிகரிக்கவும், வேகமாக வளரவும் வழிவகுக்கும். கடந்த பிப்ரவரி 2024-ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு ஜனா வங்கி செய்யும் முதல் பெரிய முதலீட்டு திரட்டும் திட்டமாகவும் இது இருக்கும். இந்த நிதி உதவி வங்கியின் வளர்ச்சிக்கு பெரும் பலத்தை அளிக்கும்.
TVS குழுமம் வேணு ஸ்ரீனிவாசனின் இந்த முதலீட்டு விருப்ப ஒப்பந்தம் ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் நிர்வாக குழுவின் ஒப்புதலுக்காகவும் மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இறுதியாக நிறைவேறினால், இந்திய வங்கித் துறையில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையும்.














Click it and Unblock the Notifications