"100 மைனஸ்" விதி.. முதலீட்டை தொடங்கும் முன்பு இது ரொம்பவே முக்கியம்.. இல்லனா வசமா மாட்டிப்பீங்க
சென்னை: இந்தக் காலத்தில் சேமிப்பும் முதலீடும் ரொம்பவே முக்கியம். இளைஞர்கள் சரியான விஷயத்தில் முதலீடு செய்தால் மட்டுமே அதிக லாபம் அடைய முடியும். ஆனால், முதலீடு செய்யும் போது எதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். இந்த குழப்பத்தை போக்கவே பொருளாதார வல்லுநர்கள் 100 மைனஸ் வயது என்ற விதியை முன்மொழிகிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் பணவீக்கம் காரணமாக விலைவாசி மளமளவென அதிகரித்து வருகிறது. இதனால் நாம் பணத்தைச் சரியாகச் சேமித்து, முதலீடு செய்யவில்லை என்றால் கடைசிக் காலத்தில் வாழ்க்கையை ஓட்டுவதே சிரமமாக இருக்கும்.

இதை உணர்ந்தே இளைஞர்கள் பலரும் தொடக்கம் முதலே சேமிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், எதில் முதலீடு செய்வது என்பதில் அவர்களுக்குத் தெளிவு இருக்காது.
முதலீடுகள்:
பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள், வைப்புத் தொகை, தங்கம் என ஏகப்பட்ட முதலீடு ஆப்ஷன்கள் உள்ள சூழலில் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கும். அப்படியுள்ள குழப்பத்தை எளிதாக போக்கவே 100 மைனர் வயது என்ற விதியை இப்போது பல பொருளாதார வல்லுநர்களும் முன்வைக்கிறார்கள். இதன் மூலம் உங்கள் வயதுக்கு ஏற்ற முதலீட்டை எளிதாகப் பெறலாம்.
100 மைனஸ் விதி:
அதாவது 100 மைனஸ் விதியின் கீழ் உங்கள் வயதை 100இல் இருந்து கழிக்க வேண்டும். அதில் உங்களுக்குக் கிடைக்கும் தொகையை நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். இதைத்தான் 100 மைனஸ் விதி எனக் குறிப்பிடுகிறார்கள். அதாவது உங்களுக்கு இப்போது 30 வயதாகிறது என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் 100இல் இருந்து 30ஐ கழித்தால் 70 வரும். எனவே, உங்கள் மாதாந்திர சேமிப்பில் 30% தொகையைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.
அதேநேரம் உங்களுக்கு 75 வயது என்றால் 100இல் 75ஐ கழித்தால் 25 வரும். எனவே, 25% மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது வயது அதிகரிக்க அதிகரிக்கப் பங்குச்சந்தை முதலீட்டைக் குறைக்க வேண்டும் என்பதே அதன் விதி. அது ஏன் வயது அதிகரிக்கும் போது பங்குச்சந்தை முதலீட்டைக் குறைக்க வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும்.
ஏன் இந்த விதி:
இதற்கான பதில் ரொம்பவே எளிது.. பங்குச்சந்தையில் லாபம் அதிகம் என்றாலும் கூட அதில் அந்தளவுக்கு ரிஸ்கும் இருக்கிறது. ஏனென்றால் மார்கெட் எப்போது என்னவாகும் என்றே தெரியாது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவு, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு தொடங்கிப் பல விஷயங்கள் பங்குச்சந்தையைப் பாதிக்கும். எனவே, உங்களுக்குக் குறைந்த வயது என்றால் அதிகம் ரிஸ்க் எடுக்கலாம்.. மார்கெட் சரிந்தாலும் அது மீண்டும் பவுன்ஸ் பேக் ஆகும் வரை காத்திருக்கலாம். ஆனால், வயதானோரால் ரிஸ்க் எடுக்க முடியாது.
இதன் காரணமாகவே குறைந்த வயது இருப்போர் பங்குச்சந்தைகளிலும் வயதாக வயதாகக் கடன் பத்திரங்களிலும் அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மார்கெட் குறித்தும் முதலீடு குறித்தும் எந்தவொரு புரிதலும் இல்லாதவர்கள் இந்த 100 மைனர் வயது விதியை ஒரு அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்யலாம்.
கவனம்:
அதேநேரம் இது அனைவருக்கும் பொருந்தும் எனச் சொல்ல முடியாது. அவருக்கு குடும்ப செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும், கடன் இருக்கிறது என்றால் அவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முன்பு பொருளாதார ஆலோசகரிடம் கருத்துக் கேட்பது சரியாக இருக்கும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications