தங்கத்திற்கு இணையாக வெள்ளி.. "இது" நடந்தால் ரேட் பறக்கும்! ஆனா நடக்குமா? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: இந்தியாவில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. மற்றொரு பக்கம் வெள்ளி விலையும் கூட தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் குறைந்தாலும் கூட பெரும்பாலான நாட்கள் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதே ரேஞ்சில் போனால் மிக விரைவில் ஒரு கிராம் தங்கம் விலையே ரூ.10 ஆயிரத்தைத் தாண்டக்கூடும் எனச் சொல்கிறார்கள்.

தங்கம் விலை
சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.8720க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.33 குறைந்து ரூ.9518க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் கூட கடந்த சில காலமாகவே கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.109.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வெள்ளி விகிதம்
இதற்கிடையே நெட்டிசன்கள் தங்கம் டூ வெள்ளி விகிதம் என்ற ஒன்றை முன்வைக்கிறார்கள். அதாவது ஒரு அவுன்ஸ் (28.3495 கிராம்) தங்கத்தை வாங்க நமக்கு எவ்வளவு அவுன்ஸ் வெள்ளி வேண்டும் என்பதே இந்த விகிதமாகும். 1980களில் இந்தத் தங்கம் வெள்ளி விகிதம் 17: 1ஆக இருந்தது.. ஆனால், இப்போது 80:1ஆக அதிகரித்துவிட்டது. இதனால் வரும் நாட்களில் தங்கம் விலையைக் காட்டிலும் வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயரும் என்றும் தங்கம் வெள்ளி விகிதம் குறையும் என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து விளக்கியுள்ளார். தங்கம், வெள்ளி இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து விளக்கிய அவர், வெள்ளி விலை அதிகரிக்குமா என்பது குறித்தும் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "தங்கம் அதிகரிக்கும் அளவுக்கு வெள்ளி அதிகரிக்காது. சிலர் தங்கம்: வெள்ளி விகிதம் என்றெல்லாம் சொல்வார்கள். அதில் எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. வெள்ளியை எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியும் வாங்காது. இந்த விகிதம் எல்லாம் 100:1 வரை கூடப் போகலாம்.
தங்கத்திற்கும் பணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதேநேரம் வெள்ளிக்கும் பணத்திற்கும் தொடர்பு இல்லை. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு லிங்க் இருந்தது உண்மை தான். ஆனால், அப்போது சில்வரையும் தங்கமாகக் கருதினார்கள். தங்கம், வெள்ளி என இரண்டையும் அப்போது கரன்சியாக கருதினர். குறிப்பாக இந்தியாவில் வெள்ளி கரன்சியாக கருதப்பட்டது.
இந்தியாவில் வெள்ளி
110 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அப்போது நமது நாட்டில் கரன்சி வெள்ளியாக இருந்தது. வெள்ளி விலை அதிகரித்த நிலையில், பலரும் கரன்சியாக இருந்த வெள்ளி காயினை உருக்கி வெள்ளியாக விற்றுவிட்டனர். அதன் பிறகு பிரிட்டனின் லார்ட் கீன்ஸ் வந்து சிக்கலைச் சமாளித்தார்.
இது நடந்தால் வெள்ளி எகிறும்
இதுபோல பிரச்சினை வந்ததால் நமது நாட்டில் வெள்ளிக்கும் கரன்சிக்கும் இடையேயான தொடர்பு கட் ஆகிவிட்டது. தங்கத்தை உலக நாடுகளின் மத்திய வங்கி வாங்கும். ஆனால், வெள்ளியை எந்தவொரு நாடும் வாங்காது. புழக்கத்தில் உள்ள பணத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இடையேயான கேப்பும் அதிகரித்தே வரும். எனவே, வெள்ளியால் தங்கத்தை எட்டிப்பிடிக்கவே முடியாது. ஒருவேளை சீன மத்திய வங்கி வெள்ளியை வாங்கி குவிக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்போது தான் வெள்ளி விலை அதிகரிக்கும்" என்றார்.
நடக்குமா?
அதாவது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஆபத்தான காலத்தில் உதவத் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இந்தியா உட்பட பெரும்பாலான உலக நாடுகள் தங்கத்தின் கையிருப்பை அதிகரித்து வருகிறது. இதுவே தங்கம் விலை உயரப் பிரதானக் காரணம். இதுபோல வெள்ளியை உலக நாடுகள் கையிருப்பில் வைக்க டன் கணக்கில் வாங்கினால் மட்டுமே அதன் விளை படுவேகமாக உயரும். அதேநேரம் இதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. மேலும், தங்கம் விலையைக் காட்டிலும் வெள்ளி விலை எளிதாக உயரவும் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications