போலீஸ்போல் நடித்து.. புடவை வியாபாரியிடம் வழிப்பறி.. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஆம்பூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே போலீஸ் உடை அணிந்த மர்ம நபர்கள் ஜவுளி வியாபாரியின் பணத்தை பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி வசூல் பணத்தை காரில் எடுத்து செல்வதை அறிந்த மர்மநபர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
ஜவுளி வியாபாரி தந்த புகாரில் வழக்குப்பதிந்த போலீசார் போலீஸ் உடை அணிந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஈரோட்டை சேர்ந்த வியாபாரி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர் ஜவுளி வியாபாரி. இவர் ஈரோட்டில் இருந்து கொண்டு வரும் பட்டுப் புடவைகளை வேலூர், குடியாத்தம், ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று புடவை வியாபாரம் செய்துவிட்டு வசூலித்த பணம் ரூ.1.5 லட்சத்தை காரில் எடுத்துக் கொண்டு சொந்த ஊர் சென்று கொண்டிருந்தார். அவருடன் தந்தையும் காரில் பயணம் செய்தார்.

போலீஸ் போல் விசாரணை
இவர்கள் சென்ற கார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அவர்கள் சென்ற காரை பின்னால் ஒரு கார் நீண்ட நேரமாக தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் நெடுஞ்சாலையில் வழக்கமாக வாகனங்கள் செல்லும் என்பதால் கனராஜூக்கு சந்தேகம் எழவில்லை. இந்நிலையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வெங்கிளி என்ற இடத்தில் காரை ஓரமாக நிறுத்தி உள்ளார் கனகராஜ். அப்போது பின்தொடர்ந்து வந்த கார் இவர் நிறுத்திய காரின் முன்பாக ஓவர்டேக் செய்து நின்றது. அதில் இருந்து போலீஸ் உடையணிந்த மர்ம நபர்கள், கனகராஜ் ஓட்டி வந்த காரின் ஆவணங்களை கேட்டுள்ளனர்.

ரூ.1.5 லட்சம் வழிப்பறி
இதை அடுத்து கனகராஜ் ஆவணங்களை எடுத்துக் கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராமல் காரில் இருந்த பணப் பையை எடுத்துக்கொண்டு தப்பியதாக தெரிகிறது. இதையடுத்து கனகராஜ் காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

1.5 லட்சம் பணத்துடன் ஓட்டம்
மேலும் கனகராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்று வட்டார காவல்நிலையங்களுக்கு தகவல் பகிரப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இனிமேல் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் சுங்கச்சாவடி, உணவகங்கள், பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் நிறுத்தினால் இதுபோன்ற குற்றவாளிகளிடம் இருந்து தப்பிக்கலாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications