அய்யோ பாவம் விரக்தியாயிட்டாங்க..'காக்கி டவுசர்' கவுரவர்கள்! ஆர்எஸ்எஸ்-ஸை கிண்டல் செய்த ராகுல் காந்தி
சண்டிகர்: ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை 'காக்கி டவுசர்' அணிந்திருக்கும் கவுரவர்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸாரை பாண்டவர்களுடனும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை கவுரவர்களுடனும் ஒப்பிட்டு பேசுகையில், ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ்-க்கு இருக்கும் செல்வாக்கை கண்டு விரக்தி அடைந்திருப்பதால் ராகுல் காந்தி இவ்வாறு பிதற்றி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ்ஸை குறிவைக்கும் ராகுல்
பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி வரும் ராகுல் காந்தி, தொடக்கத்தில் பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் மட்டுமே விமர்சித்து வந்தார். ஆனால், யாத்திரை மகாராஷ்ட்ராவை அடைந்தது முதலாக, ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தனது முக்கிய டார்கெட்டாக மாற்றியுள்ளார் ராகுல். குறிப்பாக, ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் ஒருவரான சாவர்க்கரை, பிரிட்டிஷாரிடம் ஓய்வூதியம் பெற்று வாழ்க்கையை நடத்தியவர் என அவர் விமர்சித்தது பெரும் பேசுபொருளாக மாறியது. அந்த வகையில், தற்போது மீண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சீண்டியுள்ளார் ராகுல் காந்தி.

மகாபாரத போர்
ஹரியாணாவில் உள்ள அம்பாலா மாவட்டத்தில் இன்றைய நடைப்பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார். அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஹரியாணாவில்தான் மகாபாரத போர் நடைபெற்றது. தற்போது அதே ஹரியாணாவில் இருந்து ஒரு புதிய மகாபாரத யுத்தத்தை நாம் தொடங்கப் போகிறோம். இந்த யுத்தமும் பாண்டவர்களுக்கும், கவரவர்களுக்கும் இடையேதான் நடக்கப் போகிறது.

'காக்கி டவுசர்' போட்ட கவுரவர்கள்
இதில் பாண்டவர்கள் யார்? மக்களோடு மக்களாக இருப்பவர்கள். அனைவரிடமும் அன்பை பரப்புபவர்கள். தீய விஷயங்களுக்கு எதிராக போராடுபவர்கள். ஆனால், கவுரவர்களோ மக்களிடம் வெறுப்பை விதைப்பவர்கள். அப்பாவி மக்களை சித்ரவதை செய்து ரசிப்பவர்கள். இந்த 21-ம் நூற்றாண்டு கவுரவர்களை நீங்கள் எளிதில் கண்டுகொள்ளலாம். அவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? காக்கி டவுசர் அணிந்திருப்பார்கள். கையில் கம்பு ஒன்றை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு 2, 3 கோடீஸ்வரர்கள் துணையாக இருப்பார்கள்.

பாண்டவர்கள் வெற்றியை தடுக்க முடியாது
முந்தைய மகாபாரத யுத்தத்தை போலவே, தற்போதைய மகாபாரத யுத்தத்திலும் பாண்டவர்கள் முதலில் தோல்வி அடைவதை போல தோன்றும். ஆனால் இறுதியில் வெற்றிபெறப் போவது என்னவோ பாண்டவர்கள்தான். ஏனெனில் அவர்கள் மக்களை நேசிப்பவர்கள். மக்களுக்காக உழைப்பவர்கள். வெறுப்பை விதைப்பவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டமே இருக்கலாம். ஆனால் இறுதியில் வெல்லப்போவது அன்பை பரப்பும் பாண்டவர்கள்தான். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications