கல்யாணம், ஃபர்ஸ்ட் நைட்.. மீண்டும் கல்யாணம்.. 20 வருடத்துக்குப்பின் சிக்கிய பலே மன்னன்.. 50 பெண்களா?
சண்டிகர்: பெண்களை திருமணம் செய்து, முதலிரவு முடிந்தவுடன் பணம், நகைகளை திருடிக்கொண்டு கம்பி நீட்டிய பலே கல்யாண மன்னனை காவல்துறையினர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் தபேஷ் குமார் பட்டாச்சார்யா. 55 வயதான இவர் கடந்த 1992ம் ஆண்டு அதாவது தன்னுடைய 24வது வயதில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். இரு வீட்டாரும் கலந்து பேசி இந்த திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். திருமணத்திற்காக பெண் வீட்டு தரப்பிலிருந்து ஓரளவு நகையும், கொஞ்சம் பணமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

திருமணம் முடித்த பின்னர் 8 ஆண்டுகள் குடும்பத்துடன் இருந்திருக்கிறார் தபேஷ் குமார். பின்னர் திடீரென ஒருநாள், ஆள் காணவில்லை. எங்கு போனார்? என்ன ஆனார்? என எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால் இதற்கடுத்து இவர் செய்த சம்பவங்கள் அனைத்தும் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொல்கத்தாவிலிருந்து வந்த அவர், பெங்களூரில் 'ஸ்மார்ட் ஹைர் சொல்யூஷன்ஸ்' எனும் பெயரில் ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் இளைஞர்கள்/இளம்பெண்கள் பலரை ஏமாற்றி ஏராளமான பணத்தை கறந்திருக்கிறார். இருப்பினும் நீண்ட காலத்திற்கு இப்படி ஒரே மாதிரியாக ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், தனது ஏமாற்றும் வழியை மாற்றியிருக்கிறார். அதாவது மேட்ரிமோனி இணையதளத்தில் தனது பெயரை பதிவு செய்து பெண்களை ஏமாற்ற தொடங்கியுள்ளார். இவரது இலக்குகள் எல்லாம், திருமணமாகி விவாகரத்தான பெண்களும், நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் பெண்களும் தான்.
ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதில் இவருக்கு நிகர் யாரும் கிடையாது. அந்த அளவுக்கு பெண்களை மயக்கும் விதமாக பேசுவார். இப்படி பேசி பேசி மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், திரிபுரா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா என பல மாநிலங்களை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் ஆசிரியர், மருத்துவர், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் என இவர் திருமணம் செய்யாத துறையை சார்ந்த பெண்களே கிடையாது.
அந்த அளவுக்கு படித்த பெண்களையும் இவர் ஏமாற்றியுள்ளார். சுமார் 50 பெண்கள் வரை இவர் ஏமாற்றியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். எல்லா பெண்களிடத்திலும் ஒரே பேட்டர்ன்தான். திருமணம் செய்வது முதலிரவு முடிந்தவுடன் நகை, பணம் போன்றவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்துவிடுவது. 55 வயதாகியும் இவருடைய ஆட்டம் குறையவில்லை என்பதால் காவல்துறையினர் இவரை எப்படியாவது பிடித்துவிடுவது என்று முடிவெடுத்தனர்.
அதன்படி தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த வேட்டையில் தபேஷ் குமார் ஒடிசா மாநிலத்தில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் வட மாநிலங்களில் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications