பாக். எல்லையிலிருந்து 10 கி.மீ. தூரம்தான்.. பிரதமர் பாதுகாப்பில் குளறுபடியா?.. அமரீந்தர் கொந்தளிப்பு
சண்டீகர்: நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத போது பஞ்சாப் முதல்வரும் மாநில உள்துறை அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் இன்று ரூபாய் 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட இருந்தார். இதற்காக அவர் பஞ்சாப் செல்ல முற்பட்டார். அப்போது மோசமான வானிலை நிலவியதால் பஞ்சாப்பிற்கு செல்லும் ஹெலிகாப்டர் பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்தார்.
இதையடுத்து சாலை மார்க்கமாக பெரோஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஹூசைனிவாலா பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமரின் வாகனம்
இதனால் மேற்கொண்டு செல்ல வழியின்றி பிரதமரின் வாகனம், பாதுகாப்பு வாகனங்கள் 20 நிமிடங்கள் பாலத்திலேயே காத்திருந்தது. பிரதமரின் பயணம் குறித்து மாநில அரசுக்கு தெரிவித்த நிலையிலும் எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என கூறப்படுகிறது.

பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு
பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அளித்துள்ள விளக்கத்தில், பிரதமர் மோடியின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் ஏற்படவில்லை.

பஞ்சாப் முதல்வர் விளக்கம்
அவர் முதலில் ஹெலிகாப்டரில்தான் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் எங்களுக்கு சாலை மார்க்கத்திற்கு அவரது பயணம் மாறிவிட்டது குறித்து எந்த தகவலையும அளிக்கவில்லை. நான் போராட்டக்காரர்களுடன் பேசி 3 மணிக்குள்ளாக கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டேன். 70000 பேர் கலந்து கொள்ள நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதில் 700 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால்தான் பிரதமர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது என விளக்கமளித்தார் சன்னி.

உயிருடன் அனுப்பியதற்கு பிரதமர் நன்றி
இந்த நிலையில் பஞ்சாபிலிருந்து பதிண்டா விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேசுகையில் தன்னை உயிருடன் விமான நிலையத்திறகு அனுப்பி வைத்ததற்காக பஞ்சாப் முதல்வருக்கு நன்றி தெரிவித்துவிடுமாறு பிரதமர் கூறியுள்ளார். இந்த நிலையில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

பாகிஸ்தான் எல்லை
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா? அதுவும் பாகிஸ்தான் எல்லையிலிருந்து வெறும் 10 கி.மீ. தூரத்தில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி எனும் போது முதல்வர் நாற்காலியில் உட்கார சரண்ஜித் சிங் சன்னிக்கு உரிமையே இல்லை. அவர் விரைவில் பதவி விலக வேண்டும் என கண்டனம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications