பஞ்சாப்பில் மீண்டும் ஷாக்.. சீக்கியக்கொடியை அவமதித்ததாக மேலும் ஒருவர் அடித்துக்கொலை.. என்ன நடந்தது?
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஹர்மந்திர் சாஹிப் எனும் சீக்கிய மக்களின் புனிதத் தலம் உள்ளது. பொற்கோவில் என்றழைக்கப்படும் இது மிகப் பழமையான குருத்வாராக கருதப்படுகிறது.
நேற்று இங்கு சீக்கியர்கள் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் அதனை அவமதித்ததாக கூறி 30 வயதுடைய இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞர் அடித்துக்கொலை
சீக்கிய புனித நூலை அவமதித்ததாக கூறி அங்கு பணியமர்த்தப்பட்ட SGPC ஊழியர்கள் அவரை கொன்றதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. உயிரிழந்தவரின் அவரது அடையாளத்தை கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அந்த இளைஞருடன் எத்தனை பேர் இருந்தனர் என்றும்
அவர் எப்போது பொற்கோயிலுக்குள் நுழைந்தார் என்றும் அவருடன் எத்தனை பேர் இருந்தனர் என்று விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பாஜக கண்டனம்
மேலும், பொற்கோவிலின் உள்ளேயும், வெளிப்புற பகுதியிலும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். SGPC ஊழியர்களின் இந்த கொடூர செயலை பல்வேறு சீக்கிய மத குருக்களும், பக்தர்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். 'இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றாவளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மாநில பாஜக கூறியுள்ளது.

மேலும் ஒருவர் அடித்துக்கொலை
இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் குருத்வாராவில் மேலும் ஒரு நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த நபர் நிஷான் சாஹிப்பை (சீக்கியக் கொடி) அவமரியாதை செய்ததாக கூறி கபுர்தலா மாவட்டத்தில் உள்ள நிஜாம்பூர் கிராமத்தில் வசிப்பவர்கள் அந்த நபரை குருத்வாராவில் இருந்து பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

என்ன நடந்தது?
போலீசார் அந்த நபரை காவலில் எடுத்தாலும், சீக்கிய குழுக்கள் அவரைத் தங்களுக்கு முன்பாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தபோது, போலீசாருக்கும், சீக்கிய குழுக்களும் இடையே மோதல் எற்பட்டது. இந்த மோதலின்போது அந்த நபர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இறந்த நபர் யார்? என்று தெரியவில்லை. போலீசார் அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications