"என்ன பேச்சு இது.." கங்கனாவுக்கு எதிராக வெடித்த பாஜக தலைவர்கள்.. சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு ஏன்
சண்டிகர்: பிரபல பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளைக் கூறி வருகிறார். இதற்கிடையே அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறிய கருத்து இப்போதும் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பாஜகவைக் கடுமையாகப் பாதித்துள்ளதாம். இதனால் அங்குள்ள பாஜக தலைவர்கள் இப்போதும் கங்கனாவை விமர்சித்து வருகிறார்கள்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் ஹிமாச்சலில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளைக் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கங்கனா ரனாவத்: அப்படி தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் மத்திய அரசு ரத்து செய்த விவசாய சட்டங்கள் குறித்து சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை வங்கதேச வன்முறையுடன் இணைத்து கருத்து கூறிய அவர், விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
பாஜக தலைவர்களும் கங்கனாவின் கருத்தைக் கடுமையாகச் சாடினர். மேலும், கங்கனாவுக்கு இதுபோன்ற விவகாரங்களில் கருத்துச் சொல்ல எந்தவொரு அதிகாரமும் இல்லை என்றும் விளக்கம் கொடுத்தது.. இதையடுத்து கங்கனாவும் தனது கருத்து மன்னிப்பு கோரினார். அது தனது தனிப்பட்ட கருத்து என்றும் பாஜகவின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்றும் விளக்கமளித்தார்.
சரமாரி சாடல்: ஹரியானாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், கங்கனாவின் இந்த கருத்து எங்கு பாஜகவின் இமேஜை கடுமையாகப் பாதித்துள்ளதாம். ஏனென்றால் விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தியதே பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். இதற்கிடையே பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் இது தொடர்பாக மீண்டும் சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.
அவர் கூறுகையில், "கங்கனா ரணாவத்தின் கருத்துக்களுக்கும் பாஜகவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கட்சித் தலைமை விளக்கமளித்துவிட்டது. ஆனால் ஒரு பஞ்சாபி என்ற முறையில், சீக்கிய சமூகத்திற்கு எதிராக கங்கனா ரனாவத்தின் தொடர்ச்சியான பேச்சுகளும் ஆதாரமற்ற மற்றும் நியாயமற்ற அறிக்கைகளும் இங்கு நாங்கள் செய்யும் பணிகளைப் பாதிக்கிறது.
பிரதமர் மோடி: அதேநேரம் கங்கனாவின் இந்த கருத்தை வைத்து பிரதமர் மோடியின் செயல்பாடுகளை நாம் மதிப்பிடக் கூடாது என இங்கு வசிக்கும் மக்களுக்கு நான் கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன். விவசாயிகள் மீது பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய அன்பு இருக்கிறது. இது அசைக்க முடியாத பந்தம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, கங்கனாவின் பொறுப்பற்ற கருத்துகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்றார்.
ஹரியானா தேர்தல்: ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது அங்கு நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. பூபிந்தர் சிங் தலைமையில் அங்குக் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. ஹரியானாவில் மொத்தம் 90 சீட்கள் இருக்கும் நிலையில், குறைந்தது 46 இடங்களில் வெல்லும் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும்.
இந்த முறை அங்குக் காங்கிரஸ் கட்சிக்கு வெல்ல வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதம் ஆகியவை பாஜகவுக்கு எதிராகப் போகலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications