ஹரியானா: முதல்வர் பதவி கேட்டு மிரட்டிய பாஜக சீனியர் அனில் விஜ்ஜை தவிக்க விட்ட சுயேட்சை 'சித்ரா'!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக பிரம்மாண்ட வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைகிறது. ஹரியானாவில் பாஜக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், தேர்தலுக்கு முன்னரே சீனியரான தமக்குதான் முதல்வர் பதவி தர வேண்டும் என மிரட்டல் விடுத்த முன்னாள் அமைச்சர் அனில் விஜ், அம்பாலா கண்டோன்மென்ட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான சித்ராவை விட சில மணிநேரம் சொற்ப வாக்குகளில் பின்னடைவில் இருந்ததால் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறுதியாக 7,277 வாக்குகள் வித்தியாசத்தில் அனில் விஜ் வெற்றி பெற்றார்.
ஹரியானாவில் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து பாஜக ஆட்சியை நடத்திய நிலையில் சட்டசபை தேர்தல் களத்தில் வரலாறு காணாத வகையில் உட்கட்சி மோதல் வெடித்தது. பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் ராஜினாமா செய்தனர்; கண்ணீர் விட்டு கதறி அழுதனர்; காங்கிரஸில் இணைந்தனர். இதனால் பாஜக மேலிடம் மிகவும் கலக்கமடைந்தது.

ஹரியானாவில் ஜாதிய அடிப்படையிலான வியூகம் வகுத்தும் களத்தை எதிர்கொண்ட பாஜகவுக்கு எதிர்பார்த்தபடியே வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கிய போது காங்கிரஸ் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழானது. ஹரியானாவில் ஆளும் பாஜக 49 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை அறுவடை செய்ய இருக்கிறது. இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அதே நேரத்தில் ஹரியானா பாஜக மூத்த தலைவரும் முதல்வர் பதவி தமக்குதான் தர வேண்டும் என பகிரங்க கலகக் குரல் எழுப்பியவருமான அனில் விஜ் தமது சொந்த தொகுதியில் சிறிது நேரம் பின்னடவை சந்தித்தது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் அனில் விஜ். அத்துடன் சில வாரங்களுக்கு முன்னர், பாஜகவிலேயே 6 முறை வெற்றி பெற்ற சீனியர் நான். ஆகையால் ஹரியானாவில் பாஜக மீண்டும் வென்றால் எனக்குதான் முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருந்தார் அனில் விஜ். ஆனால் நயாப் சிங் சைனிதான் முதல்வர் வேட்பாளர் என பாஜக மேலிடம் அறிவித்தது.
முதல்வர் பதவிக்காக கட்சி தலைமையுடன் முட்டி மோதிய அனில் விஜ், தாம் போட்டியிட்ட அம்பாலா கண்டோன்மென்ட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சித்ராவைவிட சுமார் 500 வாக்குகள் பின் தங்கி இருந்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறுதியாக 7,277 வாக்குகள் வித்தியாசத்தில் அனில் விஜ் வென்றார். சுயேட்சை வேட்பாளர் சித்ரா 2-வது இடம் பிடித்தார்.
1987-ல் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இதே அம்பாலா கண்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1990-ம் ஆண்டு இதே தொகுதியில் அனில் விஜ் வெற்றி பெற்றார். அத்துடன் 1996, 2000-ம் ஆண்டு தேர்தல்களில் இதே தொகுதியில் அனில் விஜ் சுயேட்சையாகவும் போட்டியிட்டு வென்றார். 2009, 2014, 2019 தேர்தல்களிலும் அனில் விஜ் அம்பாலா கண்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட்டு கோட்டையாக வைத்திருந்தார். இந்த முறை போராடியேனும் வென்றுவிட்டார் அனில் விஜ்.












Click it and Unblock the Notifications