சுய கட்டுப்பாடு இல்லாத ஆண்களே.. பெண்களை ஹிஜாப் அணிய கூறுகின்றனர் - ஹரியானா அமைச்சர் சர்ச்சை பேச்சு
சண்டிகர்: "சுய கட்டுப்பாடு இல்லாத ஆண்களே, பெண்களை ஹிஜாப் அணியுமாறு வற்புறுத்துகின்றனர்" என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், அமைச்சர் அனில் விஜ் இதுபோன்ற கருத்தை கூறியுள்ளார்.
ஏற்கனவே ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதுவம் கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், இவரது இந்தக் கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பூணூல் தப்பில்ல.. ஏது மதசார்பின்மை? ஹிஜாப் தடை தொடரும் என்ற நீதிபதி குப்தாவின் பரபர கருத்துக்கள்

பிரச்சினையின் தொடக்கம்
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு பியு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஒருதரப்பு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, அந்த மாணவிகள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஹிஜாபை மையப்படுத்தி போராட்டங்கள் வெடித்தன. ஒருசில கல்லூரிகளில் இரு சமூக மாணவர்கள் இடையே பயங்கர மோதலும் ஏற்பட்டன. இதையடுத்து, கல்வி நிலையங்களில் மத அடையாளமான ஹிஜாபை அணிந்து வர கர்நாடகா அரசு தடை விதித்தது.

உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு
கர்நாடகா அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் சிலர், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், ஹிஜாபுக்கு கர்நாடகா அரசு விதித்த தடை செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பல மாதங்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். ஒரு நீதிபதி ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்றும், மற்றொரு நீதிபதி செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் இந்த வழக்கு, வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுயகட்டுப்பாடு இல்லாத ஆண்கள்..
இந்நிலையில், பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் விஜ், ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "பெண்களை பார்த்ததும் ஆசையை கட்டுப்படுத்த முடியாத ஆண்கள் சிலர் இருக்கின்றனர். அதுபோன்ற ஆண்கள்தான் பெண்களை ஹிஜாப் அணிய சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். அதாவது, அவர்களின் மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக பெண்களை அவர்கள் அவர்கள் தண்டிக்கின்றனர். தலை முதல் பாதம் வரை பெண்களை துணியால் மறைக்கின்றனர். இது மிக மோசமான அநீதி" எனக் கூறியுள்ளார்.

பெரும் சர்ச்சை
ஏற்கனவே ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் முஸ்லிம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஹரியானா அமைச்சர் அனில் விஜ்ஜின் இந்தக் கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அனில் விஜ் இவ்வாறு கருத்து கூறியதற்காக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். கர்நாடாகாவில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்ட போது அதை மிகவும் வரவேற்பதாக அனில் விஜ் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.