பஞ்சாப் காங்கிரசில் பஞ்சாயத்து..பிரதமர் மோடியை தீடிரென சந்தித்த “முக்கிய தலை”! ஓயாத மோதலால் ஷாக்..!
சண்டிகர் : கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பஞ்சாபில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியில் குழப்பம் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லூதியானா எம்.பி சந்திந்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சட்டசபை பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு கடந்த மார்ச் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை முடிவில் பஞ்சாப் தவிர உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது.

பஞ்சாப் தேர்தல்
யாரும் எதிர்பாராதவிதமாக பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பறி கொடுத்த நிலையில், ஆம் ஆத்மி தனிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் உள்ளூர் சக்தியான சிரோமனி அகாலிதளம் ஆகிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

ஆம் ஆத்மி வெற்றி
2017ஆம் ஆண்டு 77 இடங்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெறும் 18 இடங்களை மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பஞ்சாபில் காங்கிரஸ் கணிசமான குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியானது. படுதோல்வி காரணமாக கட்சிக்குள் பழி போடும் படலம் தொடங்கி, ராகுல் காந்தியை விமர்சிக்கும் G23 தலைவர்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்ததால், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து பதவி விலக நேரிட்டது.

மோடியுடன் சந்திப்பு
பஞ்சாப் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கட்சித் தலைவராகவும் யாரையும் இதுவரை தலைமை நியமிக்கவில்லை. இந்நிலையில் லூதியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான ரவ்னீத் சிங் பிட்டு இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு "பஞ்சாப் பிரச்சனைகள்" பற்றி விவாதிக்க என்று பிட்டு கூறிய நிலையில் அவர் பாஜகவில் சேரவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.

ராகுலுக்கு நெருக்கம்
ரவ்னீத் சிங் பிட்டு பஞ்சாபில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். காங்கிரஸ் கட்சியின் இந்து முகமாக பார்க்கப்பட்ட அவர், ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர். லூதியானாவில் இருந்து எம்.பி.யான அவர், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தனது பெயரை முதல்வர் அல்லது மாநிலத் தலைவர் பதவிக்கு தலைமை பரிசீலிக்கதாததால், காங்கிரஸுடன் சிறிது காலமாக அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் அவர் பிரதமரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு அமைதியான நிலைக்குச் சென்றுள்ள மாநில காங்கிரஸ், இந்த சந்திப்பு குறித்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications