விஜய்யின் ‘ஆபரேஷன் செக்ரட்டேரியட்’.. திரிசூல வியூகம் ரெடி.. பின்னணியில் இருக்கும் ரகசிய ‘ரூட் மேப்’!
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது கோட்டையில் தனது முழு நேர நிர்வாக ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார். பதவிப் பிரமாணத்திற்குப் பிந்தைய சம்பிரதாய நிகழ்வுகள் முடிந்த கையோடு, தலைமைச் செயலகத்தில் முகாமிட்டுள்ள அவர், நாள்தோறும் ஒவ்வொரு அரசுத் துறை வாரியாக மிகத் தீவிரமான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அரசு இயந்திரத்தின் தற்போதைய வேகம் என்ன, எந்தெந்தத் துறைகளில் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன, மக்கள் மத்தியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியத் திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்து மிக விரிவான தரவுகளைத் திரட்டி, அதிகாரிகளுடன் நள்ளிரவு வரை ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் புதிய முதல்வர்.

தோல்வியின் பின்னணி... விஜய்யின் சாதுரிய 'டேக் ஓவர்'!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முந்தைய தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான காரணங்களை மிகத் துல்லியமாக ஆராய்ந்துதான், புதிய அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை முதல்வர் விஜய் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்கிறார்கள் அரசியல் விவரமறிந்தவர்கள்.
முந்தைய ஆட்சியின் போது சட்டம்-ஒழுங்கில் ஏற்பட்ட தொய்வு, தமிழகத்தைக் உலுக்கிய போதைப்பொருள் கலாசாரம், மற்றும் பெண்களுக்கு எதிரான தொடர் குற்றச்சாட்டுகள் ஆகியவைதான் மக்களின் அதிருப்திக்கு முதன்மைக் காரணியாக அமைந்தன. இந்தத் தவறுகள் தன் ஆட்சியில் அணுவளவும் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் விஜய், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் உள்துறை (காவல்துறை) மட்டுமின்றி, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த மிக முக்கியமான துறைகளையும் தன் பொறுப்பிலேயே எடுத்துக்கொண்டுள்ளார். இதன் மூலம், நிர்வாகத் தவறுகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய அவர் வியூகம் வகுத்துள்ளார்.
மக்கள் செல்வாக்கைத் தக்கவைக்க 'ஸ்பெஷல்' வியூகம்
முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத்தொகை போன்ற அடித்தட்டு மக்களைச் சென்றடைந்த திட்டங்கள், தேர்தல் களத்தில் எவ்வளவு பெரிய அதிர்வுகளை உருவாக்கின என்பதை த.வெ.க. தலைமை நன்கு உணர்ந்துள்ளது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய மற்றும் பழைய மக்கள் நலத்திட்டங்களை எவ்விதத் தொய்வும், தங்குதடையுமின்றிச் செயல்படுத்துவதற்காகவே, 'சிறப்பு திட்ட அமலாக்கத் துறை'யைத் தனது நேரடிப் பார்வையில் விஜய் வைத்துள்ளார்.
அதேபோல், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் மிக முக்கியப் பெருநகரங்களில் த.வெ.க. பெற்ற பிரம்மாண்ட வெற்றிதான் அதன் ஆட்சிக் கட்டிலுக்கான அடித்தளமாக அமைந்தது. பெருநகரங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் உழைக்கும் வர்க்க மக்களின் எதிர்பார்ப்புகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் புதிய அரசுக்கு உள்ளது. குறிப்பாக, சாலை வசதிகள், குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளில் எந்தப் புகாரும் வரக் கூடாது என்பதற்காகவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையையும் முதல்வர் விஜய் தன் வசமே வைத்துள்ளார்.
கோட்டையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் 'சிறப்பு அதிகாரிகள்'
அமைச்சர்களிடம் துறைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் மிக உணர்வுபூர்வமான மற்றும் அத்தியாவசியமான துறைகளைக் கண்காணிக்க முதல்வர் விஜய் ஒரு புதிய நிர்வாக முறையைக் கையில் எடுத்துள்ளார்.
அதன்படி, கீழ்வரும் ஐந்து முக்கியப் பிரிவுகளை நேரடியாகத் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வர, நேர்மையான மற்றும் திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உள்ளடக்கிய 'சிறப்பு அதிகாரிகள்' (Special Officers) குழுவை நியமிக்க முதல்வர் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்:
பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை
கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் ஊரக வளர்ச்சித் துறை
டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு
மகளிர் பாதுகாப்பு மற்றும் குறைதீர்ப்புத் துறைகள்
தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின்படி, இந்தச் சிறப்பு அதிகாரிகள் தங்களுக்குரிய துறைகளின் தினசரி செயல்பாடுகள் மற்றும் புகார்கள் குறித்த அறிக்கையை நேரடியாக முதல்வரின் தனிப்பிரிவுக்கே சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், இடைத்தரகர்களின் தலையீடு இன்றி, நேரடியாக முதல்வரின் கவனத்திற்குத் கோப்புகள் செல்லும் என்பதால், புதிய அரசின் வேகம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் களத்தைத் தாண்டி, தற்போது அசைக்க முடியாத நிர்வாகக் களத்திலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ள முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி 'ரூட் மேப்', தமிழக அரசு அதிகாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் புதிய உத்வேகத்தையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது..












Click it and Unblock the Notifications