பஞ்சாப் காங். ஸ்டார் பரப்புரையாளர் லிஸ்ட்டில் "பத்ம விபூஷன்" குலாம் நபி ஆசாத், மனிஷ் திவாரி இல்லை!
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஸ்டார் பேச்சாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத் மற்றும் மனீஷ் திவாரி ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படவுள்ளன.
117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு வருகிற 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்ததையடுத்து, இந்தியாவே பஞ்சாப் தேர்தலை உற்றுநோக்கிவருகிறது.

காங்கிரஸ்
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் 30 பேர் நட்சத்திர பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. கடந்த தேர்தலில்117 இடங்களில் போட்டியிட்டு 77 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ். இந்த முறை அதைவிட அதிக இடங்களைப் பிடிக்க முயற்சி செய்கிறது.

நட்சத்திர பட்டியல்
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் 30 பேர் நட்சத்திர பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன் சிங், ராகுல்காந்தி, பிரியங்கா, பஞ்சாப் முதல் மந்திரி சரன்ஜித் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோரது பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

நீக்கம்
முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம்நபி ஆசாத் மற்றும் மக்களவை எம்.பி.யான மனீஷ் திவாரி ஆகியோரது பெயர்கள் பஞ்சாப் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.இதில் மனிஷ் திவாரி பஞ்சாப் மாநிலத்தில் இருந்துதான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிருப்தி
மனீஷ் திவாரி பஞ்சாபில் தேர்தல் பிரசார பணியில் முழு வீச்சில் ஈடுபடக்கூடியவர். அவரது சமூகத்துக்கான 40 சதவீத ஓட்டுகள் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். ஆனாலும் அவர் பெயர் நட்சத்திரப் பட்டியலில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் தலைமைமீது அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதிய 23 தலைவர்களில் குலாம்நபி ஆசாத்தும், மனீஷ் திவாரியும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு தினத்தின்போது, மத்திய அரசு குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்தது. இது காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications