அழுக்கான ‘பெட்’டில் துணைவேந்தரை படுக்க வைத்ததால் சர்ச்சை.. ‘+2 பாஸ்’ அமைச்சர்.. வலுக்கும் கண்டனம்!
சண்டிகர் : அழுக்கான மருத்துவமனை படுக்கையில் மருத்துவமனை துணை வேந்தரை படுக்க வைத்த பஞ்சாப் மாநில அமைச்சர் சேத்தன் சிங் ஜோரமஜ்ராவுக்கு கண்டனங்கள் குவிகின்றன.
பஞ்சாப் மாநிலம் ஃபரீத்கோட்டில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், படுக்கைகள் அழுக்காக இருப்பதைச் சுட்டிக்காட்டி, "நீங்கள் படுங்கள் இதில்" என துணைவேந்தரை நிர்ப்பந்தித்தார்.
வேறு வழியின்றி துணை வேந்தர் டாக்டர் ராஜ் பகதூரும் படுக்கையில் படுத்துவிட்டு எழுந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனது துணை வேந்தர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

ஆம் ஆத்மி அமைச்சர்
ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சேத்தன் சிங் ஜோரமஜ்ரா. இவர் நேற்று முன் தினம் ஃபரீத்கோட்டில் உள்ள பாபா ஃபரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த படுக்கைகள் அழுக்காக, சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர், திடீரென தன்னுடன் ஆய்வின்போது இருந்த அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ராஜ் பகதூரை நோயாளிகளுக்கான படுக்கையில் படுக்குமாறு கூறினார்.

துணை வேந்தர் ராஜினாமா
அமைச்சர் ஜோரமஜ்ரா படுக்கச் சொன்ன படுக்கை அழுக்காக இருந்தது. ஆனாலும், அமைச்சர் தொடர்ந்து நிர்பந்தித்ததால் டீன் ராஜ் பகதூர் சில விநாடிகள் அந்தப் படுக்கையில் படுத்துவிட்டு எழுந்தார். இந்தக் காட்சிகள், அமைச்சருடன் வந்த ஊடக கேமரா மேன்களால் வீடியோ எடுக்கப்பட்டு செய்திகளில் வெளியாகின. இதனையடுத்து துணை வேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்
மூத்த டாக்டரும், துணை வேந்தருமான ராஜ் பகதூரை அவமதித்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மருத்துவர் ராஜ் பகதூர், ஒரு தேர்ந்த முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர். அவரை அழுக்கான படுக்கையில் படுக்குமாறு அமைச்சர் வற்புறுத்தியது கண்டனத்துக்குரிய செயல் என்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமைச்சரின் அடாவடி
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பவன் குமார் பன்சால் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் இதுபோன்ற அடாவடி அமைச்சர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. அவர் நேரடியாக வேந்தருக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

துணைவேந்தர் அவமதிப்பு
பா.ஜ.கவின் மன்ஜீந்தர் சிங் பதிவு செய்த ட்வீட்டில், "சுகாதார அமைச்சரின் செயல் அருவருப்பானது. அவர் பல்கலைக்கழக துணை வேந்தரை அவமதித்துவிட்டார். ஒரு கல்வி அறிவு இல்லாத அமைச்சர் எப்படி நடந்துகொள்வார் என்பதை நிரூபித்துவிட்டார். இதுபோன்ற மாற்றத்தைத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டுவர விரும்பினாரா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

+2 பாஸ் அமைச்சர்
காங்கிரஸ் எம்.எல்.ஏ பர்கத் சிங் தனது ட்விட்டர் பதிவில், ஆம் ஆத்மி கட்சியின் மலிவான நாடகங்கள் இன்னும் முடியவில்லை. பாபா ஃபரித் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜ் பகதூர் சிங், வெறும் +2 பாஸ் ஆன சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ராவால் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டார். இதுபோன்ற கும்பல் நடத்தை நமது மருத்துவ ஊழியர்களின் மனச்சோர்வையே ஏற்படுத்தும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications