பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி.. ராகுல் காந்தி அறிவிப்பு!
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் பிப். 10ஆம் தேதி முதல் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10இல் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
இதில் மொத்தம் 117 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்.20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

பஞ்சாப்
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பஞ்சாபில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனவே, அங்கு மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. இருப்பினும், பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே கடும் போட்டி நிலவியது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியால் முதல்வர் வேட்பாளரைக் கூட அறிவிக்க முடியாத அளவுக்குக் குழப்பத்தில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடினர்.

காங்கிரஸ்
இதையடுத்து இன்று பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்க உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறி ஒரு டெலிபோன் எண்ணையும் அறிவித்தது. இந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பொதுமக்களும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் தங்கள் முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

யார்
இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்திற்குச் சுழற்சி முறையில் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவரும் முதல்வர் பதவியில் இருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்த காங்கிரஸ் தலைவர்கள், இதுபோல முதல்வர்களைச் சுழற்சி முறையில் மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்றும் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை ராகுல் காந்தி அறிவிப்பார் என்றும் தெரிவித்தனர்.

சரண்ஜித் சிங் சன்னி
இந்தச் சூழலில் தான் தற்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், "இது என்னுடைய முடிவு இல்லை. பஞ்சாப் மக்கள், இளைஞர்கள், செயற்குழு உறுப்பினர்களின் முடிவு. ஏழைகளின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் ஒருவர் பஞ்சாப் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

ஏன் முக்கியம்
முன்னதாக அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போது, அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக அறிவிக்கப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ளதால் அதே சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல நவ்ஜோத் சிங் சித்துவும் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாக இன்று காலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications