பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொடூரமாக சுட்டுக்கொலை.. பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட மறுநாள் பயங்கரம்
சண்டிகர்: பஞ்சாபைச் சேர்ந்த பிரபல பாடகரும் காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவருமான சித்து மூஸ் வாலா சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர் சித்து மூஸ் வாலா. 28 வயதான சித்து மூஸ் வாலா, பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்புறங்களில் மிகவும் பிரபல பாடகர் ஆவர்.
இந்தச் சூழலில் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கிச்சூடு
மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் வைத்து சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜீப் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை நோக்கி சரமாரியாகச் சுட்டுத் தள்ளி உள்ளனர். அவரை நோக்கி சுமார் 30க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சித்து மூஸ் வாலாவுக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டது.

படுகொலை
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மான்சாவில் உள்ள மருத்துவமனைக்குச் சித்து மூஸ் வாலா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாநிலத்தில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு குறைப்பு
முன்னதாக நேற்று சனிக்கிழமை தான் சித்து மூஸ் வாலாவுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு இருந்தது. மாநிலத்தில் இருக்கும் விஐபி கலாச்சாரத்தைக் குறைப்பதாகக் கூறி, பகவந்த் மான் அரசு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைக் குறைத்து இருந்தது. சித்து மூஸ் வாலாவுக்கு 4 ஆயுதமேந்திய போலீசாரை கொண்டு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அது இரு காவலர்களாகக் குறைக்கப்பட்டது.

பஞ்சாப் முதல்வர்
போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் அவரது ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மூஸ்வாலா படுகொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அவரது ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மூஸ்வாலாவின் கொடூரமான கொலையால் நான் அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க மாட்டார்கள். அவரது குடும்பத்தினர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

யார் இவர்
பாடகரான சித்து மூஸ் வாலா இந்த ஆண்டு பஞ்சாப் தேர்தலில் மான்சாவிலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இருப்பினும், அவர் ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த விஜய் சிங்லா சான் சமீபத்தில் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மாதம், சித்து மூஸ் வாலா தனது புதிய பாடலில் ஆம்த ஆத்மி கட்சியை விமர்சித்து எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ்
இந்தச் சம்பவத்திற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் சித்து மூஸ் வாலா உயிரிழ்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் மூஸ் வாலாவுக்கு எதற்காகப் பாதுகாப்பு நீக்கப்பட்டது என்பதை மாநில அரசும், முதல்வரும் தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
