ஏரியா பிரித்து ஏற்பாடு..85 ஏக்கரில் மெகா பிரம்மாண்டம்! 1.5 லட்சம் தொண்டர்கள்.. மாஸ் காட்டும் தவெக..!
சென்னை: நான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டிற்கு சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடக்க இருப்பது உறுதியாக இருக்கிறது. விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்.

செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடக்கும் எனவும் அதற்கு காவல்துறை உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என விழுப்புரம் ஏடிஎஸ்பி இடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் 23ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக்காக மாநாடு நடப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் மாநாட்டிற்கு சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவில்,"நான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கழகப் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் (23.09.2024 ) அன்று நடத்துவதாக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இந்த மாநாட்டில் எங்கள் கட்சித் தலைவர் தளபதி விஜய் அவர்கள் கலந்து கொள்கிறார்.
மாநாடு நடத்துவதற்காக சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பை வாடகைக்கு பெற்றுள்ளோம். எங்கள் மாநாட்டிற்கு சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் முறையாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் பாதையில் இடது புறம் சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம். இதில் தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே பாதையில் வலது புறம் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம். இதில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இருச் சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம்.
மாநாட்டிற்க்கு வரும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் எளிமையாக கூட்ட நெரிசலின்றி வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்கான மூன்று வழிகளும், வெளியே செல்வதற்கான மூன்று வழிகளும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். மாநாட்டிற்க்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வேன்களும் அங்கு நிறுத்தப்பட உள்ளது. தீயணைப்புத்துறையின் அனுமதியும், பாதுகாப்பும் கோரவுள்ளோம்." என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் மாநாடு நடத்த இடம் பார்த்து வந்த நிலையில், பல சிக்கல்கள், சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் தான் விக்கிரவாண்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு தேதியும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications