சென்னையில் காய்,கனி வியாபாரிகள் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: எஸ்.பி. வேலுமணி
சென்னை: சென்னையில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் 1,00,124 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள் தோறும் சென்று தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ..
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மார்ச் 17 முதல் தற்போது வரை 1,66,029 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1,51,641 (91 சதவிகிதம்) நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 11,193 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த 29.9.2020 அன்று வரை 14,13,469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை மாநகராட்சி களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 7,08,891 ஆகும்.

மருத்துவ முகாம்கள்
இவை ஒரு மில்லியனுக்கான சோதனையில் 1,72,023 ஆகும். நாட்டிலேயே அதிகமான பரிசோதனை செய்த மாநகராட்சி சென்னை மாநகராட்சியாகும். சென்னையில் தற்போது வரை 53,495 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றில் 27.45 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் தான் அதிகமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன .

1 லட்சம் வியாபாரிகளுக்கு சோதனை
பொதுமக்கள் அன்றாட தேவைகளான காய்கறி, பழங்கள் மற்றும் இதரப்பொருட்களை வாங்க அங்காடிகளுக்கு செல்கின்றனர். இவ்விடங்களில் பொதுமக்களுக்கு பிற விற்பனையாளர்களிடமிருந்து தொற்று பரவாமல் தடுப்பதற்காக விற்பனையாளர்களுக்கு சோதனை செய்யப்படுகிறது. இதுவரை 1,00,124 விற்பனையாளர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதன் முலம் தினமும் சந்தைகளுக்கு வருகைதரும் பொதுமக்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. சென்னையில் 29.9.2020 அன்று வரை 22,808 வீடுகளும், 1.82 லட்சம் பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

லாக்டவுனுக்குப் பின்
சென்னை மாநகராட்சி பகுதியில் லாக்டவுனுக்குப் பிறகு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் செயல்படுகின்றது. மேலும் தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு கண்டிப்பாக முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், அனைத்து அலுவலங்களில் கைகழுவும் இயந்திரம், கைசுத்திகரிப்பான், சோப்பு போன்றவற்றை பயன்படுத்தவும் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பிற இடங்களிலும்..
இதேபோன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கோள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications