மாத சம்பளதாரர்கள் "கிலி"..வருமான வரி முறைகேடு..ஆபீசர்களுக்கு ஆன்லைனில் "ஆப்பு" வைத்த வருமானவரித்துறை
சென்னை: ஒரே நேரத்தில், 10,000 தொழில் நிறுவனங்களுக்கு, வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். ஆனாலும் சிலர் வரி ஏய்ப்பு செய்துவிடுகிறார்கள்.. அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது..

மாத சம்பளம்: அதேபோல, மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடப்பதால், இதை கண்டறியவே, புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால், மாத சம்பளதாரர்கள் போலி ரசீதை கொடுத்து தப்பிக்க முடியாது.
அதேபோல, இன்னொரு அதிரடியையும் கையில் எடுத்துள்ளது. அதன்படி, வரவு செலவு கணக்கை, "இ - வெரிபிகேஷன்" செய்யும், புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தவறான கணக்கு காட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை உள்ளதால், "இ - வெரிபிகேஷன்" என்ற 'சாப்ட்வேர்' ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டு அறிக்கை: அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தாக்கல் செய்யும், ஆண்டு வரவு செலவு கணக்குடன், தனிநபர் வங்கி பரிவர்த்தனை குறித்த ஆண்டு அறிக்கையும் ஒப்பீடு செய்து பார்க்கப்படும்.. அப்படி ஒப்பீடு செய்யும்போது, தவறான விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், இரு தரப்பிடமும் கூடுதல் விபரம் கேட்கப்படும். அந்த விளக்கம் திருப்தியாக இருந்தால், வருமான வரித்துறை ஏற்றுக்கொள்ளும்.. ஒருவேளை, கணக்கு மறைப்பு இருந்தால், அவர்கள் மீது குற்ற விசாரணை மேற்கொள்ளும்.
வருமானவரி: அந்தவகையில், ஆன்லைன் சரிபார்ப்பு சாப்ட்வேரை பயன்படுத்தி, 2021-22ம் ஆண்டில் பரீட்சார்த்த முறையில், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வரவு - செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டதில், ஆயிரக்கணக்கான வருமான வரி கணக்கு தாக்கலில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
இப்போது, தவறான கணக்குகளை தாக்கல் செய்த மற்றும் கணக்கே தாக்கல் செய்யாத, 10,000 நிறுவனங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆன்லைன்: தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குனரக அதிகாரிகள், ஆன்லைன் வழியாக, ஆண்டறிக்கைகளை ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அப்போது, ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களின் கணக்குகளையும், வங்கிகள் மற்றும் ஜிஎஸ்டி அறிக்கைகளையும் பரிசீலித்ததில், ஏகப்பட்ட முரண்பாடுகளை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதேபோல, பல நிறுவனங்கள் வங்கிகளில் பணி பரிவர்த்தனை செய்தாலும், ஆண்டறிக்கை தாக்கல் செய்யாததும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால்தான், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு, 10,000 தொழில் நிறுவனங்களுக்கு, வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காலக்கெடு: இதில், 600க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மற்றும் நிதி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளதாகவும், நோட்டீஸ் பெற்ற நிறுவனங்கள், உரிய காலக்கெடுவுக்குள் பதிலளிளித்து, அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறதாம். ஒரே நேரத்தில், 10,000 தொழில் நிறுவனங்களுக்கு, வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications