மயிலாப்பூரில் நவராத்திரி கோலாகலம்.. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் இந்து சமய அறநிலையத்துறை
சென்னை: உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்தாண்டு திருக்கோயில்கள் சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 15.10.2023 முதல் 24.10.2023 வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
ஈசனுக்கு சிவராத்திரி என்றால் அன்னைக்கு நவராத்திரி. முப்பெரும் தேவியரை போற்றும் பண்டிகையாக நவராத்திரி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. கொலு வைத்து கொண்டாடப்படும் இந்த பண்டிகை பெண்கள் மட்டும் பங்கேற்கும் பண்டிகை இல்லை. அனைவரும் பங்கேற்று அன்னையின் அருள் பெறலாம்.

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயம், கோலவிழியம்மன், முண்டகக்கண்ணியம்மன், விருப்பாக்ஷீஸ்வரர், காரணீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் கொலு வைத்து நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கி வரும் 24ஆம் தேதி வரைக்கும் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா போல அனைத்து ஆலயங்களிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பத்து நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருக்கோயில்கள் சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் நவராத்திரி பெருவிழா 15.10.2023 முதல் 24.10.2023 வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைத்து குடமுழுக்குகளை நடத்துதல், திருத்தேர், திருக்குளங்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திருக்கோயில் சொத்துக்களை மீட்டெடுத்தல், வருவாய் இனங்களை பெருக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.

திருக்கோயில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், திருஅருட்பிரகாச வள்ளலார், தெய்வப் புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாதமுனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தர் ஆச்சாரியார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் அமைக்கவும், வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் திருக்கோயிலை புனரமைக்கவும் விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு 5 திருக்கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவினை பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது.
அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்தாண்டு திருக்கோயில்கள் சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 15.10.2023 முதல் 24.10.2023 வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு நாள் நிகழ்வின்போதும், மாலை சிறப்பு வழிபாடும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக 15.10.2023 அன்று மாலை 6 மணிக்கு மாணவ, மாணவியர் பங்குபெறும் சகலகலாவல்லி மாலை பூஜையுடன் தொடங்கி, இரவு 7 மணிக்கு மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருக்கோயில்கள் சார்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழாவின் நிகழ்ச்சிகளில் சமய சான்றோர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் உலகளாவிய கோவிலில் ஸ்ரீ துர்கா பூஜை விழாவையொட்டி, துர்கா பூஜை மற்றும் லட்சுமி பூஜை நிகழ்வுகள் அக்டோபர் 20 முதல் 24 வரையிலும், அக்டோபர் 28 அன்று பகல் முழுவதும் நடைபெறுகிறது. மகா அஷ்டமி மற்றும் மஹா நவமி மாலைகளில் குங்குமம் அல்லது புஷ்ப அர்ச்சனையில் பங்கேற்க ஆர்வமுள்ள பக்தர்கள் மாலை 4 மணிக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா மயிலாப்பூரில் உள்ள தனது ஆடிட்டோரியத்தில் அக்டோபர் 16 முதல் 'நவவித நவராத்திரி விழா' நடத்துகிறது. இந்த ஆண்டு விழாவின் முக்கிய நோக்கம் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதும், இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை கொண்டாடுவதும் ஆகும் என்று கேந்திராவின் இயக்குனர் கே.என்.ராமசாமி கூறுகிறார். கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் குஜராத் மாநிலங்களின் நடனங்கள் மற்றும் இசை மற்றும் பஜனை கச்சேரிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications