பிரபல நடிகர் ரவி மோகன் வீட்டில் ரூ.10 லட்சம் வைர நெக்லஸ் மாயம்! சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடந்தது என்ன
சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இதையடுத்து பதறிப்போன ரவி மோகன் போலீசில் புகார் தரவும் அது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது ரவி மோகன் வீட்டில்?
நேற்று முன்தினம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அவசரத் தகவல் கிடைத்தது. நடிகர் ரவி மோகன் வீட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதுதான் அந்தத் தகவல். இதையடுத்து, நீலாங்கரை போலீசார் உடனடியாக ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகரின் வீட்டிற்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

போலீசார் அங்குச் சென்று பார்த்தபோது, 2 பணிப்பெண்கள் மற்றும் அவர்களுடன் ஒரு சிறுவன் ஆகியோர் வீட்டிற்குள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த சில பொருட்கள் காணாமல் போனதால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களை அங்கேயே தங்க வைத்திருந்ததாக நடிகர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைக் கேட்ட நீலாங்கரை போலீசார், திருட்டுத் தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது சந்தேகங்கள் ஏதாவது இருந்தால், சட்டப்படி போலீஸ் ஸ்டேஷனில்தான் முறைப்படி புகார் அளிக்க வேண்டும், அதைவிடுத்து, தனிப்பட்ட முறையில் யாருக்கு எதிராகவும் விசாரணை நடத்தவோ அல்லது யாரையும் சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்து விசாரிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை என்று அறிவுறுத்தினார்கள்..
பிறகு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பணிப்பெண்கள் மற்றும் அந்தச் சிறுவனை போலீசார் பாதுகாப்பாக மீட்டெடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அத்துடன் திருட்டு சம்பவத்திற்குரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்குமாறு ரவி மோகன் தரப்பினருக்கு போலீசார் சொல்லவும், அதன்படியே நடிகர் ரவி மோகனின் மேனேஜரும் நீலாங்கரை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ரவி மோகன் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் அங்கிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவ புகார் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications