பஞ்சாயத்து தேர்தலில் தோல்வி.. இப்படி நடக்கும்னு நினைச்சு பார்த்திருப்பாரா எடப்பாடி? 10 பாயிண்ட்ஸ்!
சென்னை : 1987ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர் இன்னும் 2 ஆண்டுகளில் எம்.எல்.ஏ ஆவார் என்றோ, அடுத்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் என்றோ யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படிப்பட்ட வரலாறு நடந்ததற்கு தமிழ்நாடு சாட்சியாக இருக்கிறது.
1987ல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி தான், இன்றைக்கு தமிழ்நாட்டை மிக அதிக காலம் ஆண்ட கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர்.

பல ஏற்ற இறக்கங்கள் கொண்ட பழனிசாமியின் அரசியல் கிராஃபை வெறும் பத்தே பாயிண்டுகளில் இங்கே பார்க்கலாம்..
1. 1954ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் பிறந்தார் எடப்பாடி பழனிசாமி. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பழனிசாமி, ஆரம்ப காலகட்டத்தில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கமிஷன் ஏஜெண்ட்டாக வெல்ல வியாபாரம் செய்து வந்தார்.
2. எம்ஜிஆரின் மீது இருந்த பற்றால், 1972ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு, 1973ஆம் ஆண்டு சிலுவம்பாளையம் கிளைக் கழகச் செயலாளர் பதவி கிடைத்தது. அப்படியே, கட்சியில் முன்னேறத் தொடங்கினார்.
3. 1987ல் நடுக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அணியில் இருந்து சேவல் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த நிலையில், முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பழனிசாமி.
4. 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1996ல் அதே எடப்பாடி தொகுதியில் தோல்வி அடைந்தார் பழனிசாமி. அதற்குள், கட்சியில் வேக வேகமாக வளரத் தொடங்கினார்.
5. 1998ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். 1999, 2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

6. 2006ல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பழனிசாமிக்கு, 2011ஆம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற பழனிசாமிக்கு முதன்முறையாக கேபினட்டில் இடம் கிடைத்தது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
7. 2016ஆம் ஆண்டும் எடப்பாடி தொகுதியில் இருந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனார்.
8. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதிமுக கட்சிக் குழப்பங்களுக்கு இடையே 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் பழனிசாமி. பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும் முழுமையாக அதிமுக ஆட்சிக்காலத்தை நிறைவு செய்தார்.
9. 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி பதவியேற்றார். தொடர்ந்து, இரட்டை தலைமை என்ற நிலையை மாற்றி கட்சியை தனது ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
10. கடந்த 2022 ஜூலையில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கிவிட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்த நிலையில், அவற்றில் வெற்றி பெற்று கடந்த மார்ச் மாதம் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications