100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயர் நீக்கத்துக்கு எதிராக சட்டசபையில் ஸ்டாலின் தனித் தீர்மானம்
சென்னை: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) மகாத்மா காந்தி பெயரை நீக்கி பல்வேறு உள்நோக்கங்களுடன் விபி ஜி ராம் ஜி என பெயரிட்டதை எதிர்த்து தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.
சட்டசபையில் அவர் பேசுகையில், 100 நாள் வேலை உறுதி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு விபி ஜி ராம் ஜி என பெயரிப்பட்டுள்ளதை எதிர்க்கிறோம்.

தமிழகத்தில் பாகுபாடின்றி மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயல்பட்டு வருகிறது.
மாற்றாந்தாய் மனப்பான்மை
திட்டங்களுக்கு உடனடியாக நிதியை விடுவிக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ 1,026 கோடியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை.
100 நாள் வேலை
நிதியை விடுவிக்காததால் எளிய மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஏன் இந்த ஓரவஞ்சனை? 100 நாட்கள் வேலையை உறுதி செய்து ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றன.
மகாத்மா காந்தி பெயர்
100 நாள் வேலை திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை நீக்கி பல்வேறு உள்நோக்கங்களுடன் விபி ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பெயரா மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.
ஊரக வேலைவாய்ப்பு
ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மாநில செயல்திறன்படி நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய முந்தைய ஆண்டு ஒதுக்கீட்டுக்கு குறையாமல் நிதி ஒதுக்க வேண்டும். வேலைக்கான தேவைக்கேற்ப ஒதுக்கீட்டை பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசு வகுக்க அனுமதிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நிதிப் பங்களிப்பு போல புதிய திட்டம் திருத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மகாத்மா காந்தி திட்டம்
கிராமப்புற வேலை வாய்ப்புக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் தகுதியுள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை அளிக்கப்படுகிறது. இது 100 நாள் வேலைத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
புதிய பெயர்
இதனிடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை மாற்ற வகை செய்யும், வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதாவை (VB-G RAM G) மத்திய மந்திரி சிவராஜ் சிங் மக்களவையில் கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
125 நாட்கள் வேலை
புதிய மசோதாவின்படி, ஒரு ஆண்டில் 100 நாள் வேலை திட்டமானது 125 நாட்களாக உயர்த்தப்படுகிறது. ஆனால் 100 சதவீதம் மத்திய அரசு நிதியளித்து வந்த இந்த திட்டத்திற்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதியளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நிதி சுமை
இந்த மசோதா மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் இருப்பதாகவும் மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில்தான் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான இன்று சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.












Click it and Unblock the Notifications