100 யூனிட் இலவச மின்சாரம் இனி கிடையாதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன பரபர தகவல்!
சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஆகிய திட்டங்கள் தொடரும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மத்திய அரசு இலவச திட்டங்கள் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறது. ஆனால், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் புதிய மின்திட்டங்களை செயல்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

வித்தியாசம் பார்க்காமல்
தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தொகுதிவாரியாக செய்யப்பட உள்ள புதிய பணிகளை, குறிப்பாக, துணைமின் நிலையங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவற்றை இந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள். இந்த ஆண்டு ரூ.2,300 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த விதமான வித்தியாசமும் பாராமல், அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்கள் தொகுதியில் செயல்படுத்த வேண்டிய மின்திட்டங்களைக் கேட்டறிந்து செயல்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டிரான்ஸ்பார்மர்கள்
திமுக அரசு பதவியேற்ற கடந்த ஓராண்டில், தமிழகம் முழுவதும் 28,085 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் பூமிக்கடியில் மின்சார கேபிள்கள் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும். இந்த ஆண்டு காற்றாலை, சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதையும் மின்வாரியம் பயன்படுத்தியது. இவ்வாறு பயன்படுத்தியது இதுவே முதல்முறை. இதன்மூலம், ஒரு யூனிட் மின்சாரம் கூட வீணாகவில்லை என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

100 யூனிட் இலவச மின்சாரம்
100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட இலவச திட்டங்கள் தொடர்ந்து செயல்படும். இலவச திட்டங்களே இருக்கக் கூடாது என்பது ஏற்புடையதல்ல. ஆனால், மத்திய அரசு இலவச திட்டங்கள் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

விவசாயிகளுக்கு
விவசாயிகளின் வாழ்க்கையில், அவர்களின் வருமானத்தில் என்ன மிச்சப்படுத்த முடியும்? விவசாயிகளின் முதலீட்டிற்கும், கடைசியாக இருக்கக்கூடிய வருமானத்தையும் பார்க்கும்போது மிகப் பெரிய இழப்பை சந்திக்ககூடிய நிலை இருக்கிறது. எனவே விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
