1000 கோடி அரசு நிலம் மீட்பு.. அபகரிக்கப் பார்த்த அதிமுக புள்ளி.. அன்றே அலர்ட் ஆன கருணாநிதி..
சென்னை: பல ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசுக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது ட்விட்டரில் இதற்காகச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றது குறித்து இரு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

முதல் பதிவில், "சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான ரூ. 1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் சட்டப் போராட்டம் நடத்தி மீட்கப்பட்டதையொட்டி, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் என்னைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்" என்றும்,
மற்றொரு பதிவில், " சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான ரூ. 1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் சட்டப் போராட்டம் நடத்தி மீட்கப்பட்டதையொட்டி மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்" என்று குறிப்பிட்டுள்ளார்
அரசின் நிலம் எப்படி அதிமுக பிரமுகரிடம் சென்றது? எப்படி சட்டரீதியாக அது மீட்கப்பட்டது? எனப் பல கேள்விகளுக்குத் திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்கேபி கருணாவிடம் பேசினோம்.

"சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகள் தங்களது இல்லங்களுக்குத் தோட்டங்களை அமைத்துப் பராமரித்து வந்தனர்.
அதற்கான செடி, நாற்றுகளை உருவாக்க ஒரு தோட்டக்கலைச் சங்கம் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்துக்கு பிரிட்டிஷ் அரசு 4 காணி (18 கிரவுண்டு) இடத்தை 99 ஆண்டு லீஸுக்கு தருகிறார்கள். இதுதான் முன்கதைச் சுருக்கம்"என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.

"அந்த இடம் இறுதியாகச் சென்னையின் மையமான ஜெமினி பாலத்துக்கு அருகில், அமெரிக்கத் தூதரகத்துக்கும் பக்கத்தில் அமைந்தது சென்னை வெயிலிலும் இங்கிலாந்து நாட்டு மலர்ச்செடிகளை வளர்க்க முனைந்த அந்தச் சீமாட்டிகளின் நல்ல எண்ணம்.
காலப்போக்கில் அந்தச் சங்கம் அப்படியே துரைசாணிகளிடம் இருந்து கைமாறி வெவ்வேறு நபர்களிடம் வந்து இறுதியாக கிருஷ்ணமூர்த்தி எனும் அதிமுக நபரிடம் வந்து சேர்கிறது.

அப்போது அரசு தந்திருந்த 99 ஆண்டு கால குத்தகை முடியும் நேரம். கிருஷ்ணமூர்த்தி அப்போதைய முதல்வர் எம்ஜிஆருக்கு வேண்டியவர் என்பதால் அவரிடம் சென்று குத்தகையை நீட்டித்துத் தருமாறு கோருகிறார்.
முதல்வரும் ஒப்புக்கொண்டு அதற்கான கோப்புகளைத் தயார் செய்யும் நேரத்தில் எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் அமெரிக்கா செல்ல நேரிடுகிறது.
அதன் பிறகு நேர்ந்த எம்ஜிஆரின் மரணம், அரசியல் குழப்பங்கள் எல்லாம் முடிந்து 1989 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வர் ஆகிறார். கருணாநிதியிடம் அந்தக் குத்தகை நீட்டிப்புக் கோப்பு செல்கிறது.
அதன் பின்னணியை அறிந்த கருணாநிதி கொதித்துப் போய், குத்தகைக் காலம் முடிந்திருந்த இந்தத் தோட்டக்கலைச் சங்கத்தையும், எதிரில் டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இருந்த அரசு நிலத்தையும் உடனடியாக கையகப்படுத்தச் சொல்லி அரசுக்கு உத்தரவிடுகிறார்.

அதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். வழக்கு தொடங்கும் முன்னரே ஆட்சி கலைக்கப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுக கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி எனப் பிரபலம் அடைந்து சசிகலா நடராஜனுக்கு நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். அடுத்து ஆட்சிக்கு வந்த அம்மையாரிடம் அதே கோப்பு போகிறது.
குத்தகை நீட்டிப்பு விஷயத்தில் முடிவெடுக்க முடியாத அளவுக்கு அந்தக் கோப்பில் கருணாநிதி கடுமையான குறிப்புகளை எழுதி வைத்திருப்பதைக் காண்கிறார். எனவே அந்தக் கோப்பையே இல்லாமல் ஆக்கிவிடச் சிலர் முயன்றனர்.
அது கருணாநிதிக்குத் தெரிய வந்து மிகக் கடுமையான அறிக்கையை அவர் வெளியிட, எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே நின்று விடுகிறது. ஆனால், அந்த இடம் மட்டும் அதே நபரின் ஆக்கிரமிப்பிலேயே தொடர்ந்து இருந்து வந்தது.

மீண்டும் 96 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி. மீண்டும் வழக்கு நீதிமன்றத்தில் நடத்தப்படுகிறது. எதிர்த்தரப்பு வழக்கமான வாய்தா மேல் வாய்தா வாங்கினாலும் வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.
மீண்டும் 2001ல் அதிமுக ஆட்சி. மீண்டும் வழக்கு அப்படியே நிற்கிறது. வழக்கை வாபஸ் வாங்கவும் கூட முயன்றனர். நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
மீண்டும் 2006ல் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறார். ஒரு வழியாக டிரைவ் இன் உட்லண்ட்ஸ் இடம் மீட்கப்படுகிறது. ஆனாலும் இந்த தோட்டக்கலைச் சங்க வழக்கு முடியவில்லை.
மீண்டும் 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிறார். இந்த முறை daring ஆக ஒரு முயற்சியை மேற்கொள்கின்றனர். அரசுக்குச் சொந்தமான இடத்தை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அந்த நிலத்தைத் தோட்டக்கலை சங்கத்தின் மீது சென்னை கலெக்டரை கொண்டு பட்டா வாங்குகின்றனர்.

பிறகு அது பெரும் சர்ச்சை ஆகி ரத்து செய்யப்படுகிறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அந்த இடத்தின் உள்ளே அரசால் கால் வைக்கக்கூட முடியவில்லை. வழக்கு உயர்நீதிமன்றத்தில் அப்படியே நிற்கிறது.
தமிழ்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஓர் இடத்தை தனிநபரிடம் இருந்து மீட்கும் அந்த அயராத சட்டப் போராட்டத்தின் முடிவு தெரியாமலேயே கருணாநிதி மறைந்து விடுகிறார். 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார்.
2022 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கை அரசு வெல்கிறது. 2023 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்கிறது.
தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்கமான இந்த வேளையில், இந்த நாளில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ்மக்களின் சொத்து ஒரு தனிநபரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் 33 ஆண்டுகால விருப்பம் நிறைவேறியுள்ளது.
இந்த அரசு நில மீட்பு ஓர் உதாரணம்தான். இதைப் போன்ற எத்தனையோ மாநில உரிமைகளை, சமூகநீதி, கல்வி உரிமைகளை அவர் மீட்டெடுத்ததுதான் தமிழ்நாட்டு அரசியல் சரித்திரம். தமிழ்நாட்டின் தனித்த அடையாளங்களுள் ஒன்று கருணாநிதியின் போராட்டம் என்றானது.
கருணாநிதியின் வாழ்நாளில் அவரைச் சட்டப் போராட்டத்தில் வீழ்த்தியவர்கள் எவருமே இல்லை. மறைந்த பின்னரும் கூட அவர் வென்று கொண்டுதான் இருக்கிறார்" என்கிறார் எஸ்கேபி கருணா












Click it and Unblock the Notifications