இன்று மிக முக்கியமான நாள்! ரூ.1000 மகளிர் உரிமை தொகை.. வீடு தேடி வரும் விண்ணப்பங்கள்! என்ன நடக்கும்?
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. முறையான திட்டமிடலுடன் குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. இதற்கான பல வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும். சென்னையில் மொத்தம் 1,417 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த டோக்கன்களை நேரில் சென்று வாங்க வேண்டியது இல்லை.

ரேஷன் கார்டு அடிப்படையில் வீடு தேடி வந்து டோக்கன், விண்ணப்பம் வழங்கப்படும். உங்களுக்கு ஒருவேளை விண்ணப்பம் வழங்கப்படவில்லை என்றால் நீங்கள் முகாமில் சென்று விண்ணப்பங்களை வாங்கலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்றில் இருந்து வீடுகளுக்கு நேரடியாக வந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும்.
முகாம்கள்: இந்த டோக்கன்கள் வழங்கப்பட்ட பின் சென்னையில் இதற்காக வரும் 24ம் தேதி முதல் முகாம்கள் தொடங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 650 ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்பட உள்ளன. முதல் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முடியும். இரண்டாம் கட்ட முகாம் உடனடியாக தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடக்கும். இரண்டு கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 3 -4 கடைகளுக்கு ஒரு முகாம் என்று 250 முகாம்கள் முதல் கட்டமாக அமைக்கப்படும். அதன்பின் இரண்டு, மூன்று கட்டங்களில் மற்ற ரேஷன் கடைகளுக்கு முகாம்கள் அமைக்கப்படும்.
இந்த முகாம்களில் தினமும் 80 முதல் 100 டோக்கன்கள் கொண்ட மக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாங்கப்படும்.
எத்தனை பேர்: மொத்தமாக 17.18 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் 10 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முதல் கட்டமாக 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதால் கூடுதலாக விண்ணப்பங்களை அச்சடிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
அசத்தல் திட்டம்: குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.
இந்த திட்டத்தின் கீழ் 21 வயதை தாண்டிய பெண்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் உங்கள் குடும்பம் கூட்டு குடும்பம். ஒரே ரேஷன் கார்டில் 2-3 பெண்கள் 21 வயதுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு திருமணமும் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.
இதில் யார் குடும்ப தலைவி என்ற குழப்பம் ஏற்படலாம். இதற்கான விளக்கத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
இவர்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கு தனி ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே தனி தனியாக பணம் கொடுக்கப்படும். ஒரே ரேஷன் கார்டில் பணம் தரப்படாது. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ரேஷன் கார்டில் ஒருவருக்கு மட்டுமே பணம் தரப்படும்.
குடும்ப தலைவிகள்: இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான குடும்ப தலைவிகள் யார் யார்.. குடும்ப தலைவிகள் என்ற தகுதி பெறுபவர்கள் யார் என்ற விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
* குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
* ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி விண்ணப்பிக்கலாம்.
* குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என குறிப்பிட்டுள்ள பெண்
குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
* குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்பத் தலைவரின் மனைவி, குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
*திருமணம் ஆகாத தனித்த பெண்கள்; கைம்பெண்கள் & திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்ப தலைவிகளாகக் கருதப்படுவர்.
*அதேபோல் திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்












Click it and Unblock the Notifications