சென்னையில் 11 வயது சிறுமிக்கு 6 மாதமாக பாலியல் வன்கொடுமை! தையல் கடை முதியவர் உள்பட 3 பேர் கைது
சென்னை: சென்னையில் 11 வயது சிறுமியை 6 மாதமாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெரியப்பா மகன், அவனுடைய நண்பன், தையல் கடைக்கார முதியவர் என 3 மிருகங்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதியின் மகள் 11 வயது சிறுமி. இவர் தனது சித்தியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் அவருடைய சித்தி, சிறுமியிடம் விசாரித்த போது தன்னை, பெரியப்பா மகனான அண்ணன் முறை சிறுவன், அவருடைய நண்பனான மற்றொரு சிறுவன், தையல் கடைக்கார முதியவர் என 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பாட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மேற்கொண்ட மூவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பா , அம்மாவிடம் கூறிய போது அவர்கள் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.
மேலும் போலீஸார் விசாரணையில் சிறுமியின் பெற்றோர் இருவருமே மது போதையில் இருந்ததால் சிறுமி சொல்வதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. அந்த மூன்று கயவர்களும் 6 மாதங்களாக சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் சிறுமிக்கு தின்பண்டங்களை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று மூவரும் இந்த கொடுமையை செய்திருக்கிறார்கள். அதிலும் அந்த தையல் கடை முதியவர் மது போதையில் இருந்த போதெல்லாம் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
சித்தியின் தகவலால் இந்த உண்மை வெளியே வந்த நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறுமியை அந்த மூவர் மட்டும்தான் வன்கொடுமை செய்தனரா, இல்லை வேறு யாராவது செய்தனரா என போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
