60 சவரன் மட்டுமில்லையாம்! சுகபோக வாழ்வு வாழ்ந்த ஐஸ்வர்யா ரஜினி வீட்டு பணிப்பெண்.. விசாரணையில் பகீர்
110 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய பணிப்பெண்
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றிய ஈஸ்வரி 110 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக தகவல்கள் வெளியாகின.
சென்னை போயஸ் கார்டன் ராகவேந்திரா அவென்யூ சாலையில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் வீட்டு லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகளை காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் பழங்கால நகைகள், வைர கற்கள், ரத்தின கற்கள் கொண்ட நகைகள் என 60 சவரன் நகைகளை காணவில்லை. நான் இதுவரை 3 வீடுகளை மாறியுள்ளேன். நான் கடைசியாக என் தங்கை சவுந்தர்யாவின் திருமணத்தின் போது அந்த நகைகளை அணிந்திருந்தேன்.

4 ஆண்டுகள்
அதன் பிறகு 4 ஆண்டுகளாக லாக்கரை திறந்து நான் நகைகளை பார்க்கவில்லை. கடந்த மாதம் லாக்கரை திறந்த போது எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் இருந்த சில நகைகளை காணவில்லை, அது 60 சவரன் இருக்கும். இவை எல்லாம் நான் 18 ஆண்டுகளாக வைத்திருந்தவை. நான் லாக்கரை பூட்டி வைக்கும் இடம் என் வீட்டில் பணியாற்றும் இரு பணியாளர்கள், டிரைவர் ஆகியோருக்கு தெரியும்.

சந்தேகம்
அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணிபுரிந்து விட்டு நடிகர் தனுஷ் வீட்டில் பணிபுரிந்து 6 மாதத்திற்கு முன்பு திடீரென வேலையிலிருந்து நின்று விட்டதாக கிடைத்த தகவலை அடுத்து மந்தைவெளி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஈஸ்வரியை போலீஸார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். அவர் கடந்த 18 ஆண்டுகளாக ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

சிறுக சிறுக நகைகள்
மேலும் 2019 ஆம் ஆண்டு முதலே சிறுக சிறுக நகைகளை திருடி அதை விற்று தனது கணவர் அங்கமுத்துவின் வங்கிக் கணக்கில் பணத்தை போட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கார் டிரைவராக இருந்த திருவேற்காட்டைச் சேர்ந்த வெங்கடேசன் (44) என்பவர் உதவியுடன் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் என சிறுக சிறுக பல ஆண்டுகளாக திருடி வந்துள்ளனர்.

ஐஸ்வர்யா கார் ஓட்டுநர்
ஐஸ்வர்யாவுக்கு கார் ஓட்டுநராக இருப்பதால் அவர் வீட்டை விட்டு செல்லும் நேரம் , வீட்டிற்கு வரும் நேரம் என அனைத்து தகவல்களையும் வெங்கடேசன், ஈஸ்வரிக்கு கூறி வந்துள்ளார். அதை வைத்து ஐஸ்வர்யா வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து நகைகளை திருடியுள்ளார் ஈஸ்வரி. 60 சவரன் நகைகள் மட்டுமல்லாமல் 110 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களையும் இவர்கள் திருடியுள்ளனர்.

சொகுசு பங்களா
திருடிய பணத்தில் ரூ 1 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவை பணிப்பெண் வாங்கியிருப்பதும் அதற்கான ஆவணம் போலீஸாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. 40 கிராம் வைர நகைகளையும் போலீஸார் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும் திருடிய நகைகளை மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்துள்ள 350 கிராம் நகைகளை மீட்கும் முயற்சியை தேனாம்பேட்டை போலீஸார் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications