140 வழித்தடம்.. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? அதிரவைத்த சிஐடியூ
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 140 வழித்தடங்களில் அரசு மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அழுத்தம் தரப்படுவதாக தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாநகர அல்லது மண்டல போக்குவரத்து கழகத்திடமிருந்து மாறுபட்டது. சென்னையில் முழுக்க முழுக்க அரசு பேருந்துகளே ஓடுகின்றன. ஓரிரு தனியார் பேருந்துகள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் வந்து செல்லும். அதுவும் சிலமுறையே அவை வரும்..

மற்றபடி முழுமையாக சென்னைக்குள் மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளே ஓடுகின்றன. சுமார் 35 லட்சத்திற்கு அதிகமாக பயணிகள் மாநகர பேருந்துகளில் பயணிக்கிறார்கள். 3600க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையின் மையப்பகுதியில் இருந்து 50 கிமீ தூரத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணிபுரிகிறார்கள்.
இந்நிலையில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின்(சி.ஐ.டி.யு.) பொதுச்செயலாளர் வி.தயானந்தம், மாநகர பணிமனைகள் செயல்படும் சரகங்களின் தொழிலாளர் ஆய்வாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், "மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் 8 மணி நேரம், 16 மணி நேரம் முறையில் பணி புரிகிறார்கள். 8 மணி நேர பணிக்கு ஒரு வருகை பதிவும், 16 மணி நேர பணிக்கு 2 வருகை பதிவும் மாநகர போக்குவத்து கழகத்தில் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு 8 மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக மாற்றி ஒரு வருகை பதிவுடன் ரூ.500 ஊதியமும் அளிக்கப்பட்டது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் எதிர்ப்பு காரணமாக இந்த முறை பின்னாளில் கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 12 மணி நேரம் வேலை முறை தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்துக்கு மாறாக 12 மணி நேரம் வேலை வாங்கும் வகையில், 140-க்கும் மேற்பட்ட பஸ் வழித்தடங்களில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு (ஓட்டுநர்கள், நடத்துனர்கள்) பணி மாற்றப்பட்டுள்ளது. இது சட்டப்படி தவறானதாகும். தொழிலாளர்களின் உடல் நலன், இயற்கை நியதிக்கும் எதிரானதாகும்.
சர்வதேச அளவில் ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலையும், 8 மணி நேரம் ஓய்வும், 8 மணி நேரம் உறக்கமும் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் செயலாகும். எனவே, 12 மணி நேர வேலை முறையை கைவிட வேண்டும்" இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் இப்பிரச்சினை தொடர்பாக கடந்த 5-ந் தேதி மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனரிடம் புகார் அளித்தார்களாம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். அதனால் தான் தொழிலாளர் நலத்துறையிடம் சிஐடியு நிர்வாகிகள் புகார் அளித்துள்ளதாக கூறினார்கள்.












Click it and Unblock the Notifications