எடப்பாடி வீட்டில் 3 பாமக எம்.எல்.ஏக்கள்? 8 சீட்டு ரெடி! ஒரு கல்லில் 2 மாங்காய் கனவில் அன்புமணி!
சென்னை: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 8 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடைசி நேரம் வரை கூட்டணிக் கட்சிகளைக் காக்கவைப்பதுதான் பாமக கடைப்பிடித்து வரும் தேர்தல் கால யுக்தி. ஒரு கட்சியுடன் கொள்கை ரீதியாகக் கூட்டணி அமைத்து, அதன்பிறகு இரு தரப்புகளும் எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும் என உட்கார்ந்து பேசுவார்கள்.

ஆனால், பாமகவின் கூட்டணி நிலைப்பாடு என்பது அப்படி இருப்பதில்லை. கடந்த முறை வன்னியர்களுக்கான 10.5 % இடஒதுக்கீட்டை தேர்தலையொட்டி அவசரமாகக் கொண்டுவரப்பட்டு, அதை வைத்து அதிமுக கூட்டணிக்குள் செல்வதாக அவர்களது தொண்டர்களை நம்பவைத்தார்கள்.
ஆனால், அது ஒரு அரசியல் விளையாட்டு என்பது சாதாரண பொதுமக்களே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு அந்த யுக்தி பலவீனமாக இருந்ததுதான் மிகப்பெரிய துயரம்.
இப்போதுகூட அதிமுக கூட்டணியா? அல்லது பாஜக கூட்டணியா? என்பதை உறுதி செய்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது சீட்டுதான். யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி என்று சொல்கிறார்கள் அக்கட்சியினர்.

அன்புமணி ராமதாஸ், பேச்சுவார்த்தை தொடர்கிறது விரைவில் அறிவிப்போம் என்கிறார். அவசரம் இல்லை என்கிறார். கொச்சைப்படுத்தாதீர்கள் என்கிறார்.
திமுகவில் நிலையான ஒரு கூட்டணி உள்ளது. அதில் உள்ள கட்சிகள் சீட்டுகளைப் பேச்சுவார்த்தை மூலம் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அதிமுக கூட்டணியிலிருந்த பாமக, அதில் தொடர்கிறதா? இல்லையா என்பது விளக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை என்கிறார்கள். அது எந்தக் கட்சியுடன் என்று சொல்வதில் கூட ரகசியம் காக்கிறது பாமக. இதுவே அக்கட்சிக்கான பலவீனமாக மக்கள் பார்க்கிறார்கள்.

பாமக நிர்வாகிகளோ, எங்களிடம் பலம் உள்ளது. ஆகவே அடித்துக் கேட்கிறோம் என்கிறார்கள். அப்படி என்றால், தமிழ்நாட்டில் செல்வாக்கே இல்லாத பாஜகவிடம் ஏன் சீட்டு கேட்டுப் பெற வேண்டும். எங்கள் தலைமையில் கூட்டணிக்கு வாருங்கள் என அவர்களிடம் அடித்துப் பேசலாமே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துச் சொல்கிறார்கள்.
ஆக, பாமக பலத்திற்குள் பல பலவீனங்களும் இருக்கின்றன.
இந்தமுறை பாமகவின் பலவீனம் தொண்டர்கள் அல்ல. அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதி காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. அவ்வளவு ஏன் டாக்டர் ராமதாஸ் விருப்பம் கூட அதிமுகதான் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், அன்புமணியின் மத்திய அமைச்சர் கணக்கு அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதிமுகவில் சேர்ந்து வெற்றி பெற்றாலும் அந்த எம்.பி பதவியை வைத்து என்ன செய்ய முடியும். எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர முடியும்.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் பதவிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. கூடவே தோல்வியை அடைந்தாலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கேட்டுப் பெற்று நாடாளுமன்றத்திற்குள் புகுந்துவிடலாம். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கனவில் இருக்கிறார் அன்புமணி என்று சொல்கிறார்கள்.

ஆக, இதை எல்லாம் வைத்து மகன் காய் நகர்த்துகிறார். அப்பா பழைய காலத்திற்கு ஏற்றபடி வெறும் கூட்டணிக் கணக்கு மட்டும் போடுகிறார். எனவே மருத்துவர் ராமதாசுக்கும் அன்புமணிக்குமே இன்னும் ஒரு உடன்பாட்டுக்கு வர முடியவில்லை. அதற்குள் எப்படி கூட்டணி உடன்பாடு வரும் என்று சொல்கிறார்கள் தேர்தல் வியூகர்கள்.
நிலைமை இப்படி நீடிக்கும் போது அதிமுகவை பாமக நெருங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நேற்று எடப்பாடி பழனிசாமியை 3 பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் 'மரியாதை நிமித்தமாக' சந்தித்து இருக்கிறார்கள். அவர்கள் கூட்டணி குறித்துப் பேசுவதற்காகச் செல்லவில்லை என்றாலும் அந்தப் பேச்சுவார்த்தையில் 8 சீட்டுகளைக் கேட்டுள்ளார்கள். கூடவே ராஜ்ய சபா சீட்டு ஒன்றும் கேட்டுள்ளார்கள்.

அதைப்போல் பாமக கேட்கும் சில தொகுதிகளை மட்டும் அதிமுக வழங்க யோசித்து வருகிறதாம். அதை இறுதியாகப் பேசி முடிவெடுக்கலாம், அய்யாவை வரச் சொல்லுங்கள் என்று அதிமுக தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளதாம்.
கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தபோது இருகட்சிகளுக்கு ஓட்டுப்பகிர்வு சரியாக நடக்கவில்லை. ஆகவே, அதிகம் தர முடியாது என்று அதிமுக தரப்பு கூறியுள்ளதாகத் தெரிகிறது.

அதேபோல் பாமக சார்பாக ஒரு குழு பாஜக பக்கமும் பேசியுள்ளது. அங்கே 12 சீட்டு கேட்டுள்ளார்கள். இப்போது உள்ள நிலைமையில் அண்ணாமலை 20 சீட்டுக்கூட கொடுக்கலாம் என்ற முடிவில் உள்ளாராம்.
ஏனெனில் 39 தொகுதிகளில் நிற்க நட்சத்திர வேட்பாளர்கள் பாஜக பக்கம் இல்லை. அண்ணாமலை நிற்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதேபோல் எல்.முருகன் வேறு மாநிலத்திற்குப் பறந்துவிட்டார். நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கு வருவதாக இல்லை. அவருக்கு இங்கே எதிரான அலை வீசுவதாக உளவுத்துறை அவர் காதில் ஊதி உள்ளது.

ஆக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் வட தமிழ்நாட்டிலாவது சில எம்.பி. சீட்டுகளை பாமக பெறலாம். பாஜக எந்தப் பகுதியிலும் வலுவாக இல்லை. ஓட்டு வங்கியே இல்லாத ஒரு கூட்டணிக்குப் போய் ஓய்ந்து போய்விடக்கூடாது என்றும் ஒரு பக்கம் பாமக மூத்த தலைவர்கள் அய்யாவையும் அவரது மகனையும் அதிமுக பக்கம் இழுக்கும் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications