12 லட்சம் மெயில் ஐடிகள்.. ஒரே அடியாக ZOHOவிற்கு மாறிய மத்திய அரசு ஊழியர்கள்.. பரபரப்பு முடிவு!
சென்னை: கடந்த ஓராண்டில், மத்திய அரசு ஊழியர்களின் 12 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள், பிரதமர் அலுவலகம் (PMO) உட்பட, தேசிய தகவலியல் மையத்தின் (NIC) அமைப்பிலிருந்து, தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட ஸோஹோ (Zoho) நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் வேர்ட் கோப்புகள், PDF ஆவணங்கள் மற்றும் powerpoint உருவாக்க ஓப்பன் சோர்ஸ் செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, ஸோஹோவின் செயலி தொகுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Zoho மெயில்
பல அரசு ஊழியர்கள் ஓப்பன் சோர்ஸ் கருவிகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது, இது கோப்புகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம். அரசின் தகவல்கள் கசியும் வாய்ப்புகள் ஏற்படலாம். எனவே, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் தற்போது ஸோஹோ (Zoho) நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 3 அன்று, மத்திய கல்வி அமைச்சகம் ஒரு உத்தரவை வெளியிட்டது. அதில் அரசு அதிகாரிகளை ஸோஹோ தொகுப்பைப் பயன்படுத்த வலியுறுத்தியது. இந்தியாவை ஒரு சேவைப் பொருளாதாரத்திலிருந்து ஒரு தயாரிப்பு நாடாக மாற்றும் இந்திய அரசின் பரந்த தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தொழில்நுட்பம், வன்பொருள் மற்றும் மென்பொருள் சேவைகளில், உற்பத்திகளில் முன்னிலை வகிக்கும் Zoho தயாரிப்புகளை பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.
ஸோஹோ அலுவலகத் தொகுப்பு ஏற்கனவே என்ஐசி மின்னஞ்சல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டதாகவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. மின்னஞ்சல் டொமைன் பெயர்களான nic.in அல்லது gov.in மாறாமல் இருப்பதாகவும், ஆனால் தரவு சேமித்து செயலாக்கப்படும் ஹோஸ்ட் NIC-ல் இருந்து ஸோஹோவுக்கு மாறியுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. Zoho நிறுவனத்திற்கு 2023-ல் ஏழு ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதன் மூலம் டந்த ஓராண்டில், மத்திய அரசு ஊழியர்களின் 12 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள், பிரதமர் அலுவலகம் (PMO) உட்பட, தேசிய தகவலியல் மையத்தின் (NIC) அமைப்பிலிருந்து, தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட ஸோஹோ (Zoho) நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப பிரிவு
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் 1976-ல் நிறுவப்பட்ட NIC, மத்திய அரசின் தொழில்நுட்ப பிரிவு ஆகும். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை வழங்குகிறது.
இது தொடர்பாக, பாதுகாப்பு முகமைகளிடமிருந்தும், NIC மற்றும் CERT-In (கணினி அவசரகால மறுமொழி அமைப்பு-இந்தியா) போன்ற அமைப்புகளிடமிருந்தும் அறிக்கைகளைப் பெற்றோம். SQSs (மென்பொருள் தர அமைப்புகள்) ஸோஹோ தளத்தை தொடர்ந்து தணிக்கை செய்கின்றன. தரவுகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதை உறுதி செய்துள்ளோம். அதன்பின்பே அவர்களின் தயாரிப்புகளுக்கு மாற முடிவு செய்துள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு நோ - இந்தியாவிற்கு எஸ்
இந்த நிலையில் அமெரிக்காவில் உருவாக்கப்படும் செயலிகளுக்கு, பொருட்களுக்கு மக்கள் நோ சொல்ல தொடங்கி உள்ளனர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எக்ஸெல் மற்றும் பவர்பாயிண்ட் பயன்பாடுகளுக்கு உள்நாட்டு தளமான 'ஸோஹோ'வுக்கு மாறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களை கைவிட்டு.. இந்தியப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு பின் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார்.
அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் 'ஸோஹோ'வுக்கு மாறுகிறேன் - ஆவணங்கள், எக்ஸெல் மற்றும் பவர்பாயிண்ட் பயன்பாடுகளுக்கு நமது சொந்த இந்திய தளத்தை பயன்படுத்த போகிறேன். உள்நாட்டுப் பொருட்களை ஏற்றுக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் அனைவரும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ஸோஹோ வரவேற்பு
இந்த அறிவிப்பு, 'ஸோஹோ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்புவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினி வைஷ்ணவின் இந்த ஆதரவு, தங்களது பொறியாளர்களுக்குப் பெரிய மனஉறுதியைக் கொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications