55 ஆயிரம் விபத்துகள்! கவாச் இல்லாமல் இயங்கும் 13 ஆயிரம் ரயில்கள்! பகீர் உண்மைகள்!
சென்னை: ரயில் விபத்துகளுக்கு மனித தவறுகள் காரணம் இல்லை என்றும் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 17 ஆயிரம் ரயில் ஓட்டுநருக்கான பணி இடங்களை நிரப்பவே இல்லை என்றும் அதனால் பல விபத்துகள் நடந்து வருகின்றன என்றும் தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியனின் தலைவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில், கிட்டத்தட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதுபோன்ற மோசமான ரயில் விபத்துகள் நடப்பதைத் தடுக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மோடியின் ஆட்சியில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் மட்டும் 280 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தால் நாடே கவலையில் மூழ்கியது. பாஜக ஆட்சியில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்து என்று இன்றுவரை இதை எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த ரயில் விபத்திற்காக மத்திய அமைச்சரவையில் யாரும் பதவி விலகவில்லை.
இப்போது மூன்றாவது முறையாக மோடி பதவியேற்று இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. அதற்கு முன்பாக இந்தக் கோர ரயில் விபத்து நடந்துள்ளது. ஒவ்வொரு முறை ரயில் விபத்துகள் நடைபெறும் போது மத்திய அரசு அதற்கு மனித தவறுதான் காரணம் எனக் கூறி வருகின்றது.
ஆனால், உண்மை அது அல்ல. அது குறித்துப் பல திடுக்கிடும் உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார் தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியனின் தலைவர் இளங்கோவன்.
அவர் கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ரயில்வே துறை எந்தளவுக்குப் பழுதடைந்துள்ளது என்பதை புட்டு புட்டு வைத்துள்ளார்.
இளங்கோவன் இது பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு முதல் காரணம், அவர் ஆபத்தை உணராமல் சிக்னலை கடந்துள்ளார். அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று ஆராய்ந்தால், அவர் 4 இரவுகளாக ஓய்வே எடுக்காமல் அவர் தொடர்ந்து பணி செய்துள்ளார். இப்படி 4 நாள்களாக அவர் தூங்காமல் பணி செய்ததால் தூக்கக் கலக்கத்தில் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த மனித தவறுகள் ஏன் நடக்கின்றன? இந்திய ரயில்வே துறையில் 17 ஆயிரம் ரயில் ஓட்டுநர்களுக்கான பணி காலியாவே உள்ளன. சட்டப்படி 9 மணி நேரத்திற்கு மேல் ஒரு ஓட்டுநரை வேலை வாங்கக் கூடாது.
அதிகபட்சமாக 11 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது. அதற்கு மேல் சென்றால், தனது ஓய்வு கொடுங்கள் என ஓட்டுநர் உரிமை கோரலாம். அப்படித்தான் ரயிலே சட்டம் சொல்கிறது.
ஆனால், இதை மத்திய அரசு இதைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. சட்டத்தை மீறிப் பல மணிநேரம் தொடர்ந்து வேலை வாங்குகிறது. அப்படி என்றால் இந்த மனித தவறுகளால் ஏற்படும் ரயில் விபத்துகளுக்கு யார் காரணம்? இந்த சிக்னலை கடக்கும் போது நடக்கும் விபத்துகள் எப்போது நிகழ்கின்றன என்றால், ஓய்வு எடுக்காமல் பணி பார்ப்பதால்தான் நடக்கிறது. அதையே புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
ஒடிசாவில் நடைபெற்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் அனைவரும் ஒரு பிரச்சினையை எழுப்பினர். ஒன்றோடு ஒன்று சேர்ந்து ரயில்கள் மோதுவதைத் தடுக்க கவாச் பொருத்த வேண்டும் என ரயில்வே முடிவெடுத்தது. ஆனால், அதை இதுவரை அமல்படுத்தவில்லை.
இதுவரை 200 எஞ்சின்களில்தான் அதைப் பொருத்தியுள்ளார்கள். மற்ற ரயில்களில் இன்னும் அந்தக் கருவி பொருத்தப்படவில்லை. இந்திய ரயில்வேயில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் எஞ்சின்கள் உள்ளன. அதை எப்போது பொருத்துவார்கள் என முன்பே கேள்வி எழுப்பப்பட்டது. அரசிடம் பதில் இல்லை.
அதன்பின்னர் பல விபத்துகள் நடந்துவிட்டன. அவை அனைத்துமே மோதல்களால் ஏற்பட்ட விபத்துகள்தான். இனிமேலாவது கவாச் பொருத்துவதற்கான நிதியை ஒதுக்கி, அரசு அனைத்து ரயில் எஞ்சின்களிலும் அதைப் பொருத்த வேண்டும்.
சிக்னல் பழுதால் தான் பல ரயில் விபத்துகள் நடக்கின்றன. இந்தியாவில் சிக்னல் பழுதால் மட்டும் 55 ஆயிரம் ரயில் விபத்துகள் நடந்துள்ளன. 200 சிக்னல் ஒரு ஆண்டுக்கு பழுதாகின்றன. ஆனால், அரசு 100 சிக்னல் கருவிகளைத்தான் மாற்றுகிறது. மற்றவை மாற்றப்படுவதில்லை.
சுமார் 7 ஆயிரம் கோடி செலவழித்து சிக்னலை புதுப்பிக்க வேண்டி உள்ளது. அதன்பின்னர் அதைத் தானியங்கி சிக்னலாக மாற்ற வேண்டும். இவ்வளவு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்திய ரயில்வே இதைக் கண்டு கொள்ளவே இல்லை. நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு செய்யவில்லை.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இது பற்றி ரயிலே அமைச்சர் அக்கறை எடுத்துக் கொள்ளவே இல்லை.
அடுத்து தண்டவாளங்களுக்கு வருவோம். ஒரு ஆண்டுக்கு 4500 கி.மீட்டர் தண்டவாளம் பழுதாகிறது. அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். முன்னாள் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இது குறித்து வெள்ளை அறிக்கையே வெளியிட்டுள்ளார்.
அதில் ஆண்டுக்கு 2 ஆயிரம் தண்டவாளங்களைத்தான் புதுப்பிப்பதாகக் கூறியுள்ளார். இதனால் மாற்றப்பட்ட வேண்டிய தண்டவாளங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே உள்ளது என்கிறார். இன்றுவரை 10 ஆயிரம் கிலோமீட்டர் வரை தண்டவாளங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன.
இதே மாதிரி பாலங்கள் பழுதாகின்றன. அதைச் சீர் செய்ய வேண்டும். அல்லது புதியதாகக் கட்ட வேண்டும். இவை எதற்குமே மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கவே இல்லை. இவ்வளவு தவறுகளை அரசு செய்துவிட்டு, வெறும் மனித தவறுகளால் ரயில் விபத்து நடப்பதாகச் சொல்வது நியாயமா?" என்கிறார்.












Click it and Unblock the Notifications