விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!
சென்னையின் புறநகர்ப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கக் கூடிய 'சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம்' இடையேயான மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு 13 மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்தின் தாமதம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தாலும், மாநில அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும், மத்திய அமைச்சகம் இந்த ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அண்மையில் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) பதில் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
13 மாதங்களாகத் தொடரும் இழுபறி
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்த புவியியல் தகவல் அமைப்பு (GIS) நிபுணரும், போக்குவரத்து ஆர்வலருமான தயானந்த் கிருஷ்ணன், இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெற மத்திய அரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்குமாறு விஜய் தலைமையிலான புதிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மற்றும் முந்தைய திமுக அரசு இணைந்து இந்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து 13 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. ஆனால், மத்திய அமைச்சகம் இதுவரை இந்த ஒப்புதல் நடைமுறையை மிக ஆரம்பகட்ட நிலையிலேயே (Preliminary Status) முடக்கி வைத்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளையிலே வட மாநிலங்களில் சமர்ப்பிக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் அளித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசு தமிழகத்தின் திட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறதா என்ற கேள்வியை இந்த ஆர்டிஐ (RTI) தரவுகள் மீண்டும் எழுந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் சூரத் மெட்ரோ திட்டத்திற்காகக் கடந்த 2018 செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட அறிக்கை, அடுத்த ஆறே மாதங்களில், அதாவது 2019 மார்ச் மாதத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் மற்றும் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக 2019 ஜனவரியில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட அறிக்கைக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெறும் நான்கே மாதங்களில், அதாவது 2019 மே மாதத்தில் ஒப்புதல் வழங்கி அசத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் பாட்னா மெட்ரோ திட்டத்திற்காக 2018 அக்டோபரில் கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கையும், வெறும் ஆறு மாதங்களில், அதாவது 2019 பிப்ரவரியில் அப்ரூவல் பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தின் கிளாம்பாக்கம் திட்டத்திற்கு 13 மாதங்களாகியும் இன்னும் ஆரம்பகட்டப் பரிசீலனை கூடத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல், தமிழக மக்களுக்கான இந்த அத்தியாவசியத் திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்பதில் தமிழக அரசு தொடர்ந்து உறுதியாகப் பணியாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான 15.46 கிலோமீட்டர் நீள வழித்தடத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக 1,964 கோடி ரூபாய் நிதியைத் தமிழக அரசு அதிரடியாக ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications