1 மணி நேரம் போதாதா? இன்னும் 15 நாள்தான் இருக்கு.. விஜய்யும் தள்ளாடும் தமிழக வெற்றிக் கழகமும்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் இன்று சென்னையில் நடத்த இருந்த தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்து உள்ளது. விஜய் இந்த பிரச்சாரத்தை ரத்து செய்தது கடும் விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்துள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களே விஜயை விமர்சனம் செய்ய தொடங்கி விட்டனர்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கோட்டையிலிருந்து முழங்க ஆசைப்படும் விஜய்க்கு, சென்னை வீதிகளில் முழங்குவதில் என்ன தயக்கம்? தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் அனல் பறக்க வேண்டும். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கூடாரமோ 'ஏனோ தானோ' என மந்தமாக இருப்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

1 + 1 = ஏமாற்றம்?
சமீபத்தில் சென்னையில் தேர்தல் பரப்புரை செய்யத் திட்டமிட்டிருந்த விஜய்க்கு, ஒரு இடத்திற்கு ஒரு மணி நேரம் வீதம், இரண்டு இடங்களுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியதாம். "வெறும் இரண்டு மணி நேரத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்?" என வருத்தப்பட்டு, அன்றைய பிரச்சாரத்தையே ரத்து செய்துவிட்டார் விஜய். ஆனால் விஜய் ஒரு இடத்தில் அதிகபட்சம் 10 நிமிடம்தான் பேசுவார்.
இங்குதான் அரசியல் விமர்சகர்கள் புருவம் உயர்த்துகிறார்கள். "என்னப்பா இது சின்னப் பிள்ளைத்தனமா இருக்கு?" என்பதுதான் அவர்களின் கேள்வி. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்கள் முதல் களம் காணும் புதியவர்கள் வரை பலருக்கும் இதே போன்ற நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். இருக்கும் நேரத்தை வைத்துக்கொண்டு 'ஸ்கோர்' செய்வதுதானே ஒரு தேர்ந்த அரசியல்வாதிக்கு அழகு? அதை விடுத்து, அனுமதி கிடைக்கவில்லை என்று பெவிலியனுக்கே திரும்புவது, களம் காணக் காத்திருக்கும் தொண்டர்களுக்கு எனர்ஜி பூஸ்டராக இருக்காது, மாறாக டயர்ட்னஸ்ஸையே தரும்.
காலண்டர் ஓடுது... கடிகாரம் நிற்குது!
தேர்தல் தேதி ஏப்ரல் 23. பரப்புரை செய்ய கடைசி நாள் ஏப்ரல் 21. இன்று ஏப்ரல் 6-ம் தேதி ஆகிவிட்டது. கையில் இருப்பது மிஞ்சிப்போனால் 15 நாட்கள்தான். 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, தலைவர் இன்னும் சென்னையைத் தாண்டவே யோசித்துக் கொண்டிருந்தால், தென் மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் எப்போது வாக்கு சேகரிப்பார்?
"சினிமாவில் ஒரு சீன் சரியாக வரவில்லை என்றால் ரீ-டேக் வாங்கலாம். ஆனால், அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். போனால் வராது!" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கோட்டையும்... ஓட்டையும்!
திமுக, அதிமுக போன்ற ஜாம்பவான்கள் ஒருபுறம், சீமான் போன்ற தீவிர பரப்புரையாளர்கள் மறுபுறம் என களம் ரணகளமாக இருக்கிறது. இந்தச் சூழலில், "அனுமதி குறைவாக இருக்கிறது" என்று காரணம் சொல்லி ஒதுங்குவது, விஜய்யின் அரசியல் முதிர்ச்சியை கேள்விக்குறியாக்குகிறது.
வெறும் அறிக்கை
மக்கள் மத்தியில் முகம் காட்டாமல், வெறும் அறிக்கைகளாலும், சமூக வலைதளப் பதிவுகளாலும் மட்டும் கோட்டையைப் பிடித்துவிட முடியாது என்பதை விஜய் எப்போது உணர்வார்?
சினிமாவில் 'வாக்கிங்' ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் அரசியலில் 'ரன்னிங்' தான் ஜெயிக்க வைக்கும். விஜய்யின் அரசியல் வேகம் 'ஆமை' வேகமா அல்லது 'ஆக்ஷன்' வேகமா என்பதை இன்னும் சில நாட்களில் தமிழகம் பார்த்துவிடும்!












Click it and Unblock the Notifications