ஓவர் "அழுத்தம்".. கரண்ட்பில் உயர்வுக்கு காரணம் மத்திய அரசுதான்.. செந்தில்பாலாஜி அதிரடி
மின்கட்டண உயர்வு குறித்து செந்தில்பாலாஜி ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்
சென்னை: மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே, தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக தெரிவித்துள்ளார் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி..
மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.. செங்கல்பட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பங்கேற்றுள்ளார்..
Recommended Video
திமுக அரசு மீதான தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், மின்கட்டண உயர்வை பிரதானமாக எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

ஸ்பெஷல் பேட்டி
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், மின்கட்டண உயர்வு சலசலப்புகள், திமுகவின் திராவிட மாடலில் மின்சார துறையின் பங்கு, மேற்கு மண்டலம் திமுகவின் மண்டலமாக மாறிவருவது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி.. குறிப்பாக, அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது குறித்தும், தற்போதைய தமிழகத்தின் மின்வாரிய சூழல் குறித்தும் புள்ளிவிவரங்களுடன், முழு தரவுகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தோட்டம் + காடு
அமைச்சர் பேட்டியில் சொன்னதாவது: "எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடலின் அர்த்தம்.. மின்சார துறையுடன் இதை ஒப்பிடும்போது, இலவச மின்சாரத்தை பெறும் ஏழை எளிய விவசாயிகளின் முகமலர்ச்சிதான்.. பணம் இருக்கும் விவசாயிகள் தக்கலில் பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். ஆனால் 15 வருடம் 20 வருடம் காத்திருக்கக்கூடிய விவசாயிகள் இருக்கிறார்கள்.. நாலரை லட்சம் பேர் 20 வருடமாக காத்து கொண்டிருந்தார்கள்.. இவர்களில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு ஒரே வருடத்தில் தரப்பட்டுள்ளது.

சந்தோஷம் + பூரிப்பு
வானம்பார்த்த பூமியாக இருந்த காட்டை, இலவச மின்சாரம் பெற்று, மின்மோட்டாரை இயக்கி தோட்டமாக அதை மாற்றி, அவர்களின் முகத்தில் ஏற்படும் முகமலர்ச்சி இருக்கிறதே அதுதான் மாண்புமிகு முதல்வரின் சிந்தனையாகும்.. அதனால்தான் சட்டமன்றத்திலேயே அன்று சொன்னார், வாக்களித்தவர்களுக்கு சந்தோஷப்படும்படியாக இந்த ஆட்சியும், வாக்களிக்காதவர்களுக்கு, ஏன் வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவுக்கான ஆட்சியாக இது இருக்கும் என்றார்..

எலக்ட்ரிக் பில்
மின்கட்டண உயர்வு அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.. கொரோனா காலத்தில் மத்திய அரசு சார்பில் கூட்டம் நடந்தது.. அதில் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார்கள், தமிழகம் மின்கட்டணத்தை உயர்த்தியே ஆக வேண்டும் என்றார்கள்.. இதையடுத்து, நாங்கள் டெல்லிக்கு சென்று அமைச்சரை சந்தித்தோம்.. அவர்களும் இதே கருத்தைதான் சொன்னார்கள்.. காரணம், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி தமிழ்நாடு மின்சார வாரியம் கடனில் உள்ளது.. வருடத்துக்கு 16 ஆயிரத்து 500 கோடி வட்டி கட்டுகிறோம்.. மிக மோசமான சூழலில் மின்சார வாரியம் உள்ளது.. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மின்கட்டம் குறைவாக உள்ளது.. அதனால், கட்டணங்களை உயர்த்த சொன்னார்கள்..

மான்யம் + பாக்கி
ஒருகட்டத்தில் உச்சபட்சமாக என்ன செய்தார்கள் என்றால், நமக்கு முறைப்படி தரவேண்டிய மானியத்தையும், நமக்கு முறைப்படி தரவேண்டிய கடனையும் நிறுத்தி வைத்து அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலையும் வந்தது.. 67 கோடிதான் நாம் பாக்கி வைத்துள்ளோம்.. அதுக்கே நாம் மின்சாரம் தரக்கூடாது என்று நிறுத்தி வைத்துவிட்டார்கள்.. அதனால்தான், முதல்வர் ஸ்டாலின் கடுமையாக யோசித்து இப்படி ஒரு முடிவை, அதுவும் பலருக்கும் பாதிப்பு வராத வகையில் இந்த முடிவை எடுத்தார்.. இப்போதுகூட தமிழகத்தில் மட்டும்தான், மிககுறைவான மின்கட்டணம் குறைவாக உள்ளது..

விசைத்தறி ஃபைன்
விசைத்தறிக்குகூட, தமிழகத்தில்தான் மிக மிக குறைவான கட்டணம் உள்ளது.. பொதுவாக, இந்தியாவிலேயே கேரளாவில்தான் மிக குறைவான மின்கட்டணம் என்று சொல்வார்கள்.. ஆனால், கேரளாவுடன் ஒப்பிட்டு பார்த்தால்கூட நமக்கு மிகக்குறைவான கட்டணம்தான்..100-லிருந்து 0-வரைக்கும் இலவசம்.. 100லிருந்து 200 வரைக்கும் எடுத்தாலும், 225 ரூபாய்தான் நிர்ணயம் செய்துள்ளோம்.. ஆனால், இதுவே கேரளாவில் 775 ரூபாய்.. குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, அவர்களுக்கான கட்டணத்தில் ஒருசில மாற்றங்கள் வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கையாக கேட்டார்கள்.

மாஸ் ஸ்டாலின்
இதையும் கனிவுடன் பரிசீலித்த முதல்வர், 3217 கோடி அளவுக்கு உயர்த்துவதற்கு பரிசீலிக்கப்பட்ட கட்டணத்தில் இருந்து, அவர்களுக்காகவும், அவர்களின் தொழிலில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள்.. அதிமுக ஆட்சிகாலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.. அவர்களைவிட இப்போது நிறையவே குறைத்துள்ளோம்.. முதல்வர் பதவியேற்றதுமே, அனைத்து துறையையும் ஆய்வு செய்தார்.. அப்போது மின்சார வாரியத்துறை குறித்தும் ஆய்வுகளை செய்தார்.. அப்போதுதான் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் மற்றும் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நாம் வட்டி கட்டுவதை அறிந்தார்..

ஜஸ்ட் எஸ்கேப்
அதாவது சில மாதங்கள் மட்டும்தான், மின்சார வாரியம் செயல்படக்கூடிய நிலையிலும், அதற்கு பிறகு செயல்படவே முடியாத நிலைமைக்கு தள்ளப்படக்கூடிய நிலைமையில் இருந்தது.. 9 ஆயிரம் கோடியை அரசு நிதியை மானியமாக தந்து இந்த துறையை காப்பாற்றியிருக்கிறார்கள்.. இந்த வருஷம் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும்கூட, 3500 கோடி அரசின் நிதியை மான்யமாக கூடுதலாக சேர்க்கப்படுகிறது.. இப்படித்தான் மின்சார வாரியம் காப்பாற்றப்பட்டு வருகிறது..

அதிமுக பழி
ஒருபக்கம் மத்திய அரசின் அழுத்தம், நிதிநிறுவனங்களின் ஒழுங்குமுறை ஆணையத்தின் அழுத்தம் இன்னொரு பக்கம் இங்பபடிப்பட்ட சூழலில் தவிர்க்கவே முடியாத காரணத்தினால்தான், குறைந்த அளவில் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கடந்த அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட கட்டணங்களில், 30, 40 சதவீதம் தான் கட்டணங்களை இப்போது நாங்கள் உயர்த்தி உள்ளோம்.. அதாவது அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டதை காட்டிலும், பாதியைவிட குறைவாகதான் கட்டணம் இப்போது உயர்ந்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications