1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே?
சென்னை: தமிழ்நாட்டில் நான்காவது முறையாகக் குடியரசுத் தலைவரின் ஆட்சி 1991 ஆம் ஆண்டு மீண்டு அமல்படுத்தப்பட்டபோது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த கட்சிகள் அனைத்து அதனைக் கண்டித்தன. அதில் ஜெயலலிதா ஒருவர் விதிவிலக்காக இருந்தார்.
1989 தேர்தலில் ஜானகி தலைமையிலான அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. அதாவது ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுகவுக்கு சட்டமன்றத்தில் வெறும் 2 இடங்கள்தான் கிடைத்தன. ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு 27 இடங்கள் கிடைத்தன. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதால், ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்தில் களம் கண்டது. ஜெயலலிதா அணிக்குச் சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஒரு காலத்தில் திமுக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சியாகத் தேர்தலில் களம் கண்டபோது நெடுஞ்செழியனுக்குக் கிடைத்த அதே சேவல் சின்னம். ஜானகி தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதிமுகவின் தலைமையை ஜெயலலிதாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு நகர்ந்தார். அவரது வயது மூப்பு அதிரடியான அரசியலுக்கு ஒத்துழைக்கவில்லை.
திமுக கூட்டணி வெற்றி
அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிளவு இயற்கையாக திமுக அணியை வலுப்பெறச் செய்தது. திராவிட முன்னேற்றக் கழகம் 150 தொகுதிகளில் வென்றது. கூட்டணியாக 170 இடங்களைப் பிடித்தது. சிபிஎம் 15 இடங்களையும் சிபிஐ 3 இடங்களையும் பிடித்தன. இந்தியத் தேசிய காங்கிரஸ் 26 இடங்களைக் கைப்பற்றியது. ஜனதா கட்சி 4 இடங்களிலும் வென்றது. இந்த முறை அண்ணா நகர் தொகுதியிலிருந்து மாறிய மு.கருணாநிதி துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு 41,632 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ.வகாப் பெற்ற வாக்குகள் 9641 தான்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்ற மு.க.ஸ்டாலின் 50,818 வாக்குகள் பெற்று வென்றார். இவரை எதிர்த்து ஜெயலலிதா அணி சார்பாக எஸ்.எஸ்.ஆர். தம்பிதுரை 30,184 வாக்குகள் வாங்கினார். மிகமிக முக்கியமாக ஜெ.ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் களம் கண்டார். திமுக வேட்பாளர் முத்து மனோகரனை (28,872) தோற்கடித்து 57,603 வாக்குகளை வாங்கி வெற்றிபெற்றார் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா ஒரு அரசியல் ஆளுமையாக உருவெடுத்தது இந்தத் தேர்தலில்தான். எம்.ஜி.ஆர் மறைவுக்கு முன்னால் அதிமுகவின் முகமாக இருந்தவர் ஜெயலலிதாதானே ஒழிய ஜானகி அல்ல. அதிமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை அவருக்கு எம்.ஜி.ஆர் வழங்கியிருந்தார். ஜெயலலிதா வீட்டு வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்த 'இரட்டை இலை' சின்ன ஓவியத்தில் ஒரு இலையில் எம்.ஜி.ஆரும் மற்றொரு இலையில் ஜெயலலிதாவும் புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.
1984இல் இந்தளவு கட்சியில் ஜெ கை ஓங்கியிருந்தது. சூறாவளியாக அவர் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டு பம்பரம்போல் சுழன்றார். அந்தளவுக்கு கட்சிக்காரர்களிடம் ஒரு தொடர்பு ஜெயலலிதாவுக்கு இருந்தது. மேல் மட்டத்தில் உள்ள அமைச்சர்கள் வட்டாரத்தைத் தாண்டி ஜானகியை அறிந்த தொண்டர்கள் யாரும் இல்லை.
அப்படி இருந்தும் காங்கிரசிலிருந்து கழன்று வந்து சிவாஜி கணேசன் தொடங்கி இருந்த முன்னேற்ற முன்னணி ஜானகியுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தது. ஆனால், அவர் எம்பி ஆக இருந்த காலத்தில் அவையில் மக்கள் பிரச்சனைக்காக ஒருமுறைகூட கேள்வி எழுப்பியதில்லை. கேட்டதற்கு, 'மக்கள் குறைகளைப் பேசத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நான் கலைத்துறை சார்ந்து நியமிக்கப்பட்டிருக்கிறேன். ஒருவேளை நான் அவையில் தவறாகப் பேசிவிட்டால் தவறாகிவிடும், அதற்காகவே பேசாமல் இருக்கிறேன்" என்றவர் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசன் சபதம்
ஆனால், ரசிகர் மன்றங்கள் 84இல் சென்னையில் நடத்திய விழாவில், "வருடத்தில் 200 நாட்களை அரசியலுக்காகவும் மீதமுள்ள நாட்களை திரைத்துறைக்காகவும் பயன்படுத்தப் போகிறேன்" என்றார். பின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைத்தால் செய்வேன் என்றேன் என நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார்.
ஆனால், ஜானகி அணியை இந்தியத் தேசிய காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்பதால்தான் சிவாஜி தனிக் கட்சி தொடங்கினார் என ஊடகங்கள் எழுதின. ஒரு கட்சிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள். அது உடையவும் குடை சாயவும் நாம் காரணமாக இருக்கக் கூடாது என்று வாதாடினேன். போராடினேன். ஆனால், கேளாக் கதர்களாக, கேடு கெட்ட சிலரின் தூண்டுதலினால் தமிழகத்தில் ஒரு தர்மக் கொலையே நடந்தது. அந்தக் கொலைக்கு நாங்கள் உடந்தை இல்லை என்பதை நிரூபிக்கத்தான் நானும் எனது இதயங்களும் கட்சியை விட்டு வெளியேறினோம்" என விளக்கமளித்தார்.
காங்கிரஸ் மேலிடக் கட்டுப்பாட்டை மீறி ஜானகி ஆட்சியைக் காப்பாற்ற முயன்ற சிவாஜி ஆதரவு காங். சட்டமன்ற உறுப்பினர்கள் விலை போனதாகக் கூறப்பட்டது. அதற்கு, "நான் பணம் பெற்றேன் என்பது நோபல் பரிசு பெறவேண்டிய அற்புதமான கற்பனை கதை" என்றார் சிவாஜி.
மகிழ்ச்சியில் வெடித்த பட்டாசு
ஜெயலலிதா, ஜானகி, ராஜீவ்காந்தி, சிவாஜி கணேசன் எனப் பல கட்டத் தாக்குதலை எதிர்கொண்டுதான் திமுக இந்த முறை வென்றது. அதுவும் பெரும்பான்மை பலத்துடன் வென்றது. அந்த ஆட்சியை ராஜீவ்காந்தி பிரதமர் சந்திரசேகரின் மனத்தை மாற்றிக் கலைக்கச் செய்தார்.
காந்தி மறைந்த நாள் அன்று நினைவஞ்சலி செலுத்த தன் மாருதி 1000 காரில் கூட்டிச் சென்ற ராஜீவ் காந்தி, சந்திரசேகர் மனதை மாற்றிவிட்டார் என 'இந்தியா டுடே' புலனாய்வு செய்து எழுதியது. ஆம், ஜனவரி 30 ஆம் தேதி 1991 அன்று புதன்கிழமை இரவு 10 மணிக்கு நான்காவது முறையாகத் தமிழ்நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டது. முதலாவதாகக் கலைக்கப்பட்டது கருணாநிதியின் ஆட்சி. இறுதியாகக் கலைக்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சிதான்.
ஆட்சிக் கலைக்கப்பட்டதற்கு மறுநாள் ஜெயலலிதா தமிழ் செய்தி அறிக்கையின்போது டிவியில் தோன்றினார். 'ஜனநாயக விரோத, தேச விரோத அரசு' என்று குறிப்பிட்டவர், "சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை" என்று சொன்னார். முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், "கலைக்கப்பட்ட சட்டமன்றம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவில்லை. அதனால் அது கலைக்கப்படத் தகுதியானது" என்றார்.
ஜெயலலிதா வீட்டு முன் அவரது கட்சி அலுவலகம் முன் பட்டாசுகள் வெடித்தன. தரையெங்கும் அவர்களின் மகிழ்ச்சி சிதறிய காகிதங்களாகக் குவிந்துகிடந்தன.
ஏன் கலைக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தில், "இந்திய அரசியல் சாசன ஷரத்துக்களின்படி தமிழக அரசு செயல்பட முடியாத ஒருநிலை தோன்றியுள்ளது" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. 1989 ஜனவரி 27 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த மு.கருணாநிதி பதவியேற்பு விழாவுக்கு மீண்டும் ஒரு முடிவுரை எழுதப்பட்டது.
எழுதியவர்: கடற்கரய்
-
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
பாஜகவிற்கு நல்ல செய்தி.. இன்று காலை டெல்லி விரையும் எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷா சந்திப்பது ஏன்? -
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம்












Click it and Unblock the Notifications