1 கல்லில் 2 மாங்காய்.. கனிமொழிக்கு வந்த "மெகா" பதவி.. ஸ்டாலின் ராஜ தந்திரம்! ஏன் முக்கியம் தெரியுமா?
சென்னை: திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்பி தேர்வு செய்யப்பட்டு இருப்பது மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஒருவழியாக திமுக உட்கட்சி தேர்தலும் முடிவிற்கு வந்துள்ளது. ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது.
72 மாவட்டங்களில் மொத்தம் 45 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 27 மாவட்டங்களில் பலர் மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் பல இடங்களில் போட்டி வாபஸ் பெறப்பட்டு போட்டியின்றி மாவட்ட செயலாளர்கள் தேர்வானார்கள்.

நியமனம்
இதையடுத்து இன்று நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்.பியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார். ஆக்டிவ் அரசியலில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி இருக்கிறார். திமுகவில் இருந்து விலகியவர், மொத்தமாக அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து உள்ளார். அவர் திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரின் விலகல் காரணமாக வெற்றிடம் ஏற்பட்டது. இதை நிரப்புவதற்கு திமுகவில் கடுமையான போட்டி நிலவி வந்தது. திமுக எம்பி கனிமொழி இந்த பதவிக்கு தற்போது வந்துள்ளார்.

கனிமொழி
இந்த நிலையில் திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டு இருப்பது மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. கனிமொழி தேர்வு என்பதை முதல்வர் ஸ்டாலினின் ராஜ தந்திரமான நடவடிக்கை என்றும் திமுகவினர் பேச தொடங்கியுள்ளனர். இதற்கு பின் இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் விஷயம், கனிமொழி தேர்வால் மீண்டும் தென் மண்டலத்தில் திமுக கவனம் பெறும். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மண்டல மாவட்டங்களில் கனிமொழிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

ஆதரவு
கனிமொழிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. ஆனால் இதை இன்னும் திமுக முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. கனிமொழி என்னதான் எம்பியாகவும், மகளிரணி செயலாளராகவும் இருந்தாலும், கட்சியில் பொதுவாக ஒரு பெரிய பதவி இருந்தால் நன்றாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக திமுகவில் எம்பி, அமைச்சர், எம்எல்ஏவை விட கட்சி பதவிக்கே மவுசு அதிகம். அப்படி இருக்கையில் கனிமொழிக்கு மகளிரணி செயலாளர் பதவியை தாண்டி பெரிய பதவி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

திமுக
தென் மண்டலத்தில் சில குறிப்பிட்ட சமூகத்தினர் இடையே கனிமொழிக்கு பெரிய வரவேற்பு உள்ளது. இந்த நிலையில்தான் கனிமொழிக்கு தற்போது அளிக்கப்பட்டு உள்ள பதவி கட்சி ரீதியாகவும், வாக்கு வங்கி ரீதியாகவும், பெண்கள் இடையிலும் பெரிய அளவில் கவனம் பெறும் முடிவாக பார்க்கப்படுகிறது. இது போக திமுகவில் உதயநிதி ஸ்டாலின் கவனம் பெற்று வருகிறார். எம்எல்ஏவான அவருக்கு மூத்த நிர்வாகிகள் மிகுந்த மரியாதையை அளிக்கின்றனர். இந்த நிலையில்தான் கனிமொழியை ஓரம்கட்ட பார்க்கிறார்கள் என்று வாதங்கள் வைக்கப்பட்டன.

அழகிரி
மு. க அழகிரியை ஓரம்கட்டியது போல கனிமொழியை ஓரம்கட்ட பார்க்கிறார்கள் என்று வாதங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த வதந்திக்கு எல்லாம் தற்போது ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கனிமொழிக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்து, தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறார். இதன் மூலம் குடும்ப ரீதியாகவும் சரி.. கட்சி அரசியல் ரீதியாகவும் சரி கனிமொழி தேர்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications