சிங்கப்பூர் டூ சென்னை.. உள்ளாடைக்குள் எடுக்க எடுக்க தங்கம்.. பெண் உள்பட 2 பேர் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே வெளியே வர முடியும். தங்கக்கடத்தலை தடுக்க விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவார்கள். அப்படி நடத்தப்பட்ட சோதனையில் தங்கம் கடத்தி வருபவர்கள் சிக்குவார்கள். இந்நிலையில் துபாய், சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பெண் உள்பட 2 பேர் கைதாகி உள்ளனர்.
இந்தியாவை ஒப்பிடும் போது, துபாய் , சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் தங்கத்தின் விலை குறைவாக உள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்து கொண்டு வந்தால் வரி அதிகம் என்பதால், தங்க கடத்தலில் ஈடுபடுகிறார்கள். சட்டவிரோதமாக கடத்திவரப்படும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்கிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவார்கள். அப்படி நடத்தப்படும் சோதனையில் கொத்துக்கொத்தாக தங்கம் கடத்தியவர்கள் சிக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தார்கள். சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றுலா பயணியாக துபாய் சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அப்படி துபாய் சென்று திரும்பிய இளைஞர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று, முழுமையாக பரிசோதித்தனர். அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 490 கிராம் தங்க பசையை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே போல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை சுங்க அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்தனர். சென்னையைச் சேர்ந்த பெண், சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு திரும்பியிருந்தார். அவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தார்கள். அவரிடம் இருந்து மொத்தம் 380 கிராம் தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும். இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் பெண் உள்பட 2 பேரிடம் இருந்து ரூ.63 லட்சம் மதிப்புடைய 870 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைதாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications