மரண படுக்கையிலும் சத்தியம் வாங்கிய தாய்.. கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்கள்.. குவியும் பாராட்டு
சென்னை: ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு உடலை தானம் செய்து தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இரு மகள்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. தாயை போல் தாங்களும் உடலை தானம் செய்யப்போவதாக உறுதியளித்துள்ளனர்.
திருவொற்றியூர் ராமானுஜம் நகர் ஒத்தவாடை பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் அச்சகத் தொழில் நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். இவரது மனைவி மீனா (53).
இவருக்கு காயத்ரி, சுவாதி என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக மீனா சிறுநீரக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சிறுநீரகம்
இதனால் அவரது சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த மாதம் 27ஆம் தேதி ராயபுரத்தில் அமைந்துள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மீனா அனுமதிக்கபட்டிருந்தார். அப்போது தான் இறக்க நேரிட்டால் உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது. மருத்துவக் கல்லூரிக்கு உடலை தானமாக வழங்க வேண்டும் என மகள்களிடம் உறுதிமொழி வழங்கினார்.

சிகிச்சை பலனின்றி
இந்த நிலையில் 28-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனையடுத்து அவர்களது இரு மகள்களும் தாயின் ஆசையை நிறைவேற்றினர். அவரது உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கே தானமாக வழங்கினர். தாயை இழந்த நேரத்திலும் அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் உடலை தானமாக வழங்கிய செயலை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

காயத்ரி
இது குறித்து மகள் காயத்ரி கூறும் போது, தனது தாய் மீனா சமூக சிந்தனையும் பல்வேறு முற்போக்கு கருத்துக்களையும் கொண்டிருந்தவர், தனது மரணத்திற்கு பின்பு தனது உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தனது உடலை பயன்படுத்த வேண்டும் என எங்களிடம் உறுதிமொழி வாங்கி இருந்தார்.

ஸ்டான்லி மருத்துவமனை
இறுதிக்கட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதும் கூட
அவர் உடல் மிக மோசமான பாதிக்கப்பட்டிருந்தபோது கூட தனது கடைசி ஆசையான உடல் உறுப்புகளை பொதுமக்கள் அல்லது மருத்துவக்கல்லூரிகள் பயன்படுத்த வழிவகை செய்யவும் கேட்டுக் கொண்டார் என்று கூறினார்.

தாயின் வழி
மேலும் தாயின் வழியிலேயே தங்களது உடலுறுப்புகளையும் தானம் செய்ய போவதாகவும் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். சிகிச்சை பலனின்றி இறந்த தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்களை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் திருவொற்றியூர் பகுதி மக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications