20 லட்சம் சதுர அடி.. ரூ. 1100 கோடியில் ஐடி பார்க்.. அடேங்கப்பா கோவைக்கு அள்ளித்தந்த தங்கம் தென்னரசு
சென்னை: கோயம்புத்தூரில், தகவல் தொழில்நுட்பம் வாழ்வியல் அறிவியல் விண்வெளி பொறியியல் துறைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர் தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரிக்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 20 லட்சம் சதுர அடியில் இரண்டு கட்டங்களாக 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன வசதியுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும் என்றும் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தஞ்சையில் 92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சமீபத்தில்தான் விழுப்புரம் மாவட்டத்தில் ஐடி பூங்கா திறக்கப்பட்டது. 5 மாடி கட்டிடமாக இரண்டு பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நவீன தோற்றத்தில் இந்த ஐடி பார்க் அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவில் உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் நியோ டைடல் ஐடி பூங்கா கட்டப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்தும், மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான வசதிகள் குறித்தும் மேட்டுப்பாளையம் அதிமுக உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சியில் ரூ.107 கோடியில் அமைக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம், காரமடையில் இருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது. எல்காட் நிறுவனம் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் இதில் உருவாக்கியுள்ளது.
இதில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் இடத்தேவையைப் பூர்த்தி செய்ய 2.66 லட்சம் சதுர அடி பரப்பில், தகவல் தொழில்நுட்ப கட்டிட கட்டுமானப் பணிகள் ரூ.114.16 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, காரமடையில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏற்கெனவே துறையின் அமைச்சராக இருந்தவர், 2ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இன்றைய நிலையில், வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கும் துறை தகவல் தொழில்நுட்பத் துறைதான். உற்பத்தித் துறையில் முதலீடு செய்தாலும், நிலம் ஒதுக்கவும், கட்டிடம் கட்டவும் 2 ஆண்டுகளாவது ஆகும். ஆனால், ஐடி துறையில் கட்டிடம், இணைய இணைப்பு இருந்தால் உடனே வேலை வாய்ப்பு உருவாகும். அதற்காகத்தான் இந்த துறைக்கு ஊக்கமளிக்க முதல்வர் கூறியுள்ளார்.
சராசரியாக ஆண்டுக்கு 40 லட்சம் முதல் 50 லட்சம் சதுர அடி அலுவலக கட்டிடம் கட்டப்பட அல்லது குத்தகை எடுக்கப்படக் கூடிய சென்னை மாநகரில், கடந்தாண்டு சாதனையாக 1.10 லட்சம் சதுரடிக்கான கட்டிடம் ஐடி துறைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
அதே வழியில், எல்காட் நிறுவனம் கடந்த ஆட்சியில் திருச்சி, கோயம்புத்தூர், சென்னையில் 3 கட்டிடங்கள் கட்டினார்கள். ஆனால், சென்னை, கோவைக்கு சுற்றுச்சூழல் அனுமதியே வாங்கவில்லை. இதனால் தற்போது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் திறக்க முடியாமல் நீதிமன்ற வழக்கில் உள்ளது.
கோவையில் அபூர்வமான வளர்ச்சியும், அலுவலக கட்டிடங்களுக்கான அதிகபட்ச தேவையும் உள்ளது. ஆனால், 2.50 லட்சம் சதுரடியில் கட்டிடத்தை கட்டி முடித்துத் திறக்க முடியாமல் உள்ளோம். இந்த நிலையில் தற்போது, தமிழகத்தில் உள்ள திறமையைப் பயன்படுத்த வரும் தனியார் நிறுவனங்கள் கட்டிடங்களைக் கட்டி வருகின்றன. எல்காட் மூலமும் நாம் இட வசதி செய்து தருகிறோம். கோவையில் கட்டிடம் திறக்கப்பட்டால், வேலைவாய்ப்பு உருவாகும். இதுதவிர, அனைத்து இரண்டாம் நிலை நகரங்களிலும் எல்காட் பூங்காவோ, எல்காட் டவரோ உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
வெள்ள பாதிப்பு, பேரிடர் பாதிப்பு வரும் இடங்களில் அதிக பணி இருக்கக் கூடாது. அதேபோல் ஓர் இடத்தில் 10 ஆயிரம் பேருக்கு பணி என்பதைப் பிரித்து 2 இடங்களுக்கு மாற்றுதல் என்பது தற்போது நடைபெறுகிறது. மனித வளம் உள்ள இடங்களில் ஈர்ப்பு உள்ளது. இந்தியாவில் 17 சதவீதம் பொறியாளர்கள் தமிழகத்தில் இருந்துதான் வருகின்றனர். தற்போது சென்னையை விட்டு எப்படி நிறுவனங்கள் கோவையை பார்க்கிறார்களோ அதேபோல், பெங்களூரு மற்றும் ஐதராபாத்திலிருந்து சென்னை, கோவை அல்லது மதுரைக்கு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இதுதவிர, அனைத்து நாடுகளுக்கும் சென்று ஐடி துறையில் தமிழகத்தில் உள்ள மனித ஆற்றலைக் கூறி முதலீடு செய்ய வரும்படி அழைக்கிறோம். சிறப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். கோவைக்கு இன்னும் பல நிறுவனங்களையும் அழைப்போம்.
என்று கூறியிருந்தார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்.
இந்த நிலையில் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டசபையில் கோவைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமானது ஐடி பார்க். தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில், நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், தகவல் தொழில்நுட்பம் வாழ்வியல் அறிவியல் விண்வெளி பொறியியல் துறைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர் தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரிக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு 20 லட்சம் சதுர அடியில் இரண்டு கட்டங்களாக 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன வசதியுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்த ஆண்டு பட்ஜெட் கோவையை குறிவைத்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications