3 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு 20 லட்சம்.. சென்னை டூ புதுக்கோட்டை ஆம்னி பஸ்ஸில் நள்ளிரவில் ட்விஸ்ட்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் வாகனங்களில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று அதிகாலை சோதனை நடத்தினார்கள். அப்படித்தான் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி செல்லக்கூடிய ஆம்னி பஸ்சை சோதனை செய்தனர். அந்த ஆம்னி பஸ்ஸில் ரூ.20 லட்சம் ஹவாலா' பணம் சிக்கியது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுவாக இரவு நேரங்களில் போலீசார் பல்வேறு காரணங்களுக்காக வாகன சோதனை நடத்துவது வழக்கம். அப்படி சோதனை நடத்தும் போது, பழைய குற்றவாளிகள், திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சிக்குவார்கள். அதேபோல் ஏதேனும் கடத்தல் சம்பவங்கள் நடந்தாலும் குற்றவாளிகள் சிக்கி கொள்வார்கள். அந்த வகையில் புதுக்கோட்டையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று அதிகாலை வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி செல்லக்கூடிய ஆம்னி பஸ்சை புதுக்கோட்டை கருவேப்பிலான் ரெயில்வே கேட் அருகே மறித்து போலீசார் தீவிரமாக சோதனை செய்தார்கள். அப்போது சந்தேகப்படும்படியாக ஒருவர் வைத்திருந்த பையை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் கவரில் வைக்கப்பட்டிருந்தது. அந்த பணம் ஹவாலா' என்று போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த பணம் இருந்த பையை போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் அந்த பணத்தை கொண்டு வந்த நபரை பிடித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 48 வயதாகும் அமீர் என தெரியவந்தது. மேலும் அதனை தன்னிடம் ஒருவர் கொடுத்து புதுக்கோட்டையில் ஒருவரிடம் கொடுக்குமாறு கூறியதாகவும், அதற்கு ரூ.3 ஆயிரம் பணம் தருவதாக கூறி தந்து அனுப்பியதாக கூறினார்.
மேலும் அந்த பணத்தை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து ஒருவர் வாங்கி கொள்வார் என கூறியதாகவும் போலீசாரிம் தெரிவித்தார். அந்த பையில் மொத்தம் ரூ.20 லட்சத்து 81 ஆயிரத்து 150 இருந்தது. இதனை பறிமுதல் செய்து அமீரை புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தார்கள்.
போலீசார் அங்கு நடத்திய விசாரணையில், அந்த பணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், முன்னுக்கு பின் முரணாக கூறி வந்தார். இதையடுத்து திருச்சி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? அதனை யாரிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது? என்பது தொடர்பாக அமீரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications