எல்.முருகன் எஸ்கேப்! அப்படியே ஒதுங்கிய அண்ணாமலை! இதுதான் பாஜக பலம்? களத்தில் திமுகவை எதிர்க்க பயமா?
சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் போட்டியிலிருந்து எல்.முருகன் விலகியது ஏன்? என்ற சந்தேகம் பாஜக வட்டாரத்திற்கு உள்ளாகவே ஒலிக்கத் தொடங்கி உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மத்திய இணையமைச்சர் எல். முருகன், தேர்தல் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிக் கொண்டிருக்கிறார்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுக்கும் மத்திய இணையமைச்சர் எல்.முருகருக்கும் ஏற்பட்ட காரசார விவாதத்தில், எல்.முருகனைப் பார்த்து 'அன்ஃபிட்' என்று டி.ஆர். பாலு பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.
ஒரு பட்டியலின அமைச்சரைப் பார்த்து எப்படி 'தகுதி'யற்றவர் என எப்படிச் சொல்லலாம் என பாஜக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தினர். எல்.முருகனும் 'என்னையும் எனது சமுதாயத்தையும் டி.ஆர்.பாலு அவமதித்துவிட்டதாகவே கருதுகிறேன்' என்று பேட்டி அளித்தார்.
நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு, அவர் தனது 'தகுதி'யை நிரூபித்து திமுகவினருக்குத் தக்க பதிலடி தருவார் என்று பலரும் பேசினர்.

அவரும் சில வருடங்களாகவே நீலகிரி தொகுதியை மையமாக வைத்து தனது தேர்தல் பணிகளைச் செய்து வந்தார். தமிழ்நாட்டின் மலைப்பிரதேசமான நீலகிரியில் பாஜகவின் வளர்ச்சி நன்றாக இருப்பதாகவும் ஊடக விவாதங்களில் பாஜகவினர் கூறிவந்தனர்.
நாடு முழுவதுமே பாஜக மலைக்கிராம மக்களை தங்களின் பக்கம் இழுப்பதற்கான வேலைகளில் தொடர்ந்து செய்து வருகிறது.
இந்த ஊகங்களுக்குத் தீனிபோடும் விதமாக, எல்.முருகனும் நீலகிரியில் முகம் அமைத்து கட்சிப் பணி ஆற்றிவந்தார். கட்டாயம் இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக நிறுத்தப்பட உள்ள 'ஸ்டார் கேண்டிடேட்' வரிசையில் முருகன் இருப்பார் என்றே ஊடகங்கள் இடைவிடாமல் பேசி வந்தன.

இன்னும் சொல்லப்போனால், இந்த மக்களவைத் தேர்தலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட தமிழ்நாட்டில் போட்டியிடலாம் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க, போட்டியிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டுள்ளனர். நேற்று மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வ மாக பாஜக தேசிய தலைமை அறிவித்தது.
மத்திய அமைச்சர் ஒருவர் தங்களின் கட்சி சார்பில் போட்டியிடுவார் என நம்பிக் கொண்டிருந்த பாஜக தொண்டர்கள் மத்தியில் இது மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, தனக்குப் பலதொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டிய வேலை இருப்பதனால், இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
வழக்கமாக இதைப் போன்ற கேள்விகள் எழும் போது கட்சித் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதையே நான் ஏற்பேன் என்றுதான் பொறுப்பாகப் பதிலளிப்பார்கள்.
ஆனால், தேசிய தலைமை அறிவிப்பதற்கு முன்பே நான் போட்டியிடப் போவதில்லை என அண்ணாமலை சொல்வது தேர்தல் பணிச்சுமையாலா? அல்லது பின்வாங்கலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தேர்தல் களத்திலிருந்து விலகி உள்ள எல்.முருகன், 'திமுகவைக் கண்டு எல்லாம் பயப்படவில்லை. நீலகிரியில் பாஜக சார்பாக யார் நின்றாலும் திமுகவை ஓட ஓட விரட்டுவார்கள்.
கட்சித் தலைமை நாளைக்கே நீலகிரி தொகுதியில் போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவேன். இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு திமுகவை நுழைய விடாமல் தடுப்பதே பாஜகவின் இலக்கு' என்று சொல்லி இருக்கிறார்.
நீலகிரியில் பாஜக முன்பைவிட வளர்ந்துள்ளது என கள நிலவரம் சொல்வதைவிட ஊடகங்கள் பாஜக அங்கே வளர்ந்துள்ளதாகத் தொடர்ந்து சொல்கின்றன. அதற்குக் காரணம் மற்ற தொகுதிகளில் எங்கும் பாஜக மத்திய இணையமைச்சர் ஒருவர் தொடர்ந்து கட்சி பணியை முகாம் போட்டுச் செய்யவில்லை.

ஆனால், எல்..முருகன் நீலகிரி தொகுதிக்குள்ளாகவே இருந்து வருகிறார். சில நாட்கள் முன்னதாகக் கூட மலை அடிவாரத்தில் சாலையில் காய்கறி விற்கும் பெண்மணியிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யவில்லையா? அங்கே யுபிஐ பரிவர்த்தனைக்கான க்யூஆர் கோட் என்று கேட்டார். அது தொடர்பான வீடியோ கூட வெளியானது.
அப்படித் தொடர்ந்து அங்கேயே முகாம் இட்டிருப்பதால் பாஜக அங்கே வளர்ந்து வருகிறது என்ற பார்வை உள்ளது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் சனாதன பேச்சைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட கடை அடைப்பு போராட்டம் கூட நீலகிரியில் நல்ல ரிசல்ட்டை தந்தது.
ஆக, அங்கே பாஜக இயங்கி வருகிறது என்பது உண்மை. ஆனால், எல்.முருகன் சொல்வதைப் போல பாஜக சார்பாக யாரை நிறுத்தினாலும் வென்று விடுவார்கள் என்பது எல்லாம் கற்பனை. ஏனென்றால், அங்கே திமுக வேட்பாளராக மீண்டு நிற்க உள்ள ஆ.ராசா கிராஸ் ரூட் லெவலில் வேலை செய்து கொண்டுதான் உள்ளார்.

அவர் சாதாரணமாக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். அந்தளவுக்கு அவரும் அந்தத் தொகுதியில் ஸ்டார் வேட்பாளர்தான்.
தேர்தலைச் சந்திக்கும் வரை ஆவேசமாகப் பேசும் பாஜகவினர், தேர்தல் களம் வரும் போது ஏன் சறுக்குகிறார்கள் என்பது மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது.
தேர்தலில் நின்று களம் காணும் போது தானே அக்கட்சியின் தொண்டர்களுக்குக் கட்சியின் மீதும் தலைமையின் மீது நம்பிக்கை வலுப்பெறும். அதைவிட்டு விட்டு, எனக்குத் தேர்தல் பணி உள்ளது. ஆகவே நிற்கவில்லை என்பது சமாளிப்பதாகவே பார்க்கப்படும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கூடத்தான் போட்டியிட்டார். அவர் பல தொகுதிகளுக்குச் சென்று அவரது கட்சியினருக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லையா? எடப்பாடிக் கூடத்தான் தேர்தலில் போட்டியிட்டார்.

அவர் தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சியினருக்காகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லையா? அவ்வளவு ஏன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் மற்ற தொகுதிகளுக்குச் சென்று பரப்புரை செய்யவில்லையா? வாக்கு சேகரிக்கவில்லையா?
ஆக, அண்ணாமலை பின்வாங்கியது பெரிய அடிதான். அவர் ஒருவேளை தனக்குச் சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு. முதல்வர் நாற்காலி மீதுதான் ஆசை என்று நினைத்தால், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பது இல்லை. சட்டசபைத் தேர்தலுக்குக் குறைந்தது 2 ஆண்டுகள் உள்ளன. அதுவரை எம்.பி. ஆக இருந்து கட்சியை வளர்க்கலாமே?
திமுக முன்னாள் தலைவர் அண்ணாதுரைகூட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் கட்சியின் சார்பாக மாநிலங்களவைக்குச் சென்றார். அதன்பின்னர் மீண்டும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரானார். ஆக, அதேபோல் அண்ணாமலை செய்யலாமே?

தமிழ்நாட்டில் நாங்கள் தான் 3வது பெரிய கட்சி. அதிமுக களத்திலே இல்லை. நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று மேடையில் முழங்கினால் மட்டும் போதுமா? அண்ணாமலை அதைக் களத்தில் நிரூபிக்க வேண்டாமா? அதைத் தொண்டர்கள் எதிர்பார்க்க மாட்டார்களா?
எதற்கெடுத்தாலும் நாங்கள்தான் 3வது கட்சி என்கிறார்.
ஆனால், கடந்த 2021சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக அதிமுக கூட்டணி பலத்தோடு போட்டியிட்டது. வெறும் 4 இடங்கள் வெற்றி பெற்றது. கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வென்றார். திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் வென்றனர்.
20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களைப் பிடிப்பது பெரும் சாதனையா? அதிலும் ஒரு ஆறுதல் உண்டு. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக சட்டமன்றத்திற்கு நுழைந்தது. அது சாதனைதான்.
அப்படி இருந்து என்ன சிறப்பு? மாநிலத் தலைவர் அண்ணாமலை தோற்றுப் போனாரே? அப்புறம் என்ன 3வது பெரிய கட்சி என விமர்சனங்கள் வராதா?
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 12,889 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது. அதில் 312 இடங்களில் வெற்றிபெற்றது. சென்னையில் 200 வார்டுகளில் போட்டிப் போட்டது. கடைசியில் 1 வார்டில்தான் வெற்றி பெற்றது. இது மூன்றாவது பெரிய கட்சியா?
2021 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. உள்ளாட்சித் தேர்தலில் 16 வார்டுகளில் சென்னையில் போட்டியிட்டது. அதில் 13 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
தற்போதைக்கு அதிமுகவுக்கு அடுத்தபடியாக சட்டமன்றத்தில் 3வது பெரிய கட்சியாகக் காங்கிரஸ்தான் உள்ளது. அதை அண்ணாமலை உணராமல் கட்சி வளர்ந்துவிட்டது என ஊடகத்தில் சொல்லிக் கொண்டிருந்தால் அது எப்படி உண்மையாக இருக்கும்?
சொல்லப்போனால், பாஜகவின் உள்ள ஸ்டார் வேல்யூ தலைவர்களே குறைவு. எல்.முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் என விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர்.
அவர்களே தேர்தலில் நிற்காமல் பின்வாங்குவது திமுகவின் மீதான அச்சம்தான் காரணம் என நாம் சொல்லவில்லை. அரசியல் விமர்சகர்கள், ஏன் மக்களே கூட சொல்லத் தொடங்கி உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் 25 இடங்களில் பாஜக போட்டியிட வேண்டும் என்பது அண்ணாமலையின் திட்டம். அப்படி என்றால், அந்த வேட்பாளர்கள் யார்? அதில் மக்கள் செல்வாக்கு அல்லது மக்களின் அறிமுகம் பெற்றவர்கள் யார் என்பது முக்கியம் இல்லையா?
கே.என். நேருவின் மகன் ஒரு தொகுதியில் நிற்கிறார் என வைத்துக் கொள்வோம், அவருக்கு இணையான ஒரு முகம் பாஜக போட வேண்டுமா ? வேண்டாமா? அப்படிப் பார்த்தால் பாஜகவில் வேட்பாளராக நிற்கவே பஞ்சம் நிலவுகிறது என்று உட்கட்சியிலிருந்தே ஒரு சில குரல்கள் கேட்கின்றன. அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய தேவை அண்ணாமலைக்கு உள்ளது.
அதை எல்லாம் விட அவரது கட்சித் தொண்டர்கள் உற்சாகம் பெறுவதற்காக வேண்டி அவர் மக்களவைத் தேர்தலில் நிற்க வேண்டும். திமுகவைக் களத்தில் எதிர்த்து வென்று காட்ட வேண்டும். இது பெருமை அல்ல; கடமை!
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications