‛நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.. மறக்காமல் உடனே விண்ணப்பம் செய்யுங்க
சென்னை: 2025ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்று (மார்ச் 7) கடைசி நாளாகும். இதனால் நீட் தேர்வை எழுத விரும்புவோர் இன்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
நம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் எனும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ‛நீட்' நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு என்பது நடத்தி மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இன்னும் விலக்கு அளிக்கவில்லை. இதன்மூலம் நீட் தேர்வை தமிழக மாணவ-மாணவிகளும் ஆண்டுதோறும் எழுதி வருகின்றனர். அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதிகள் கடந்த மாதம் தேசிய தேர்வு முகமை சார்பில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2025ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 7 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. ஒரு மாதம் வரை நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. இன்று மார்ச் 7 ம் தேதியாகும். இதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாளாகும். https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ. 1,700, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ரூ.1,600, எஸ்சி/எஸ்டி/3ம் பாலினத்தவர்கள்: ரூ.1000 மற்றும் வெளிநாட்டினர் ரூ.9,500 தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வு எழுத விரும்புவோர் இன்று உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மே 1ம் தேதி ஹால் டிக்கெட் என்பது வெளியிடப்படும். பிறகு மே 4ம் தேதி இளநிலை நீட் தேர்வு என்பது நாடுமுழுவதும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications