பொங்கலுக்கு ஊருக்கு போக டிக்கெட் இல்லையா? கவலையை விடுங்க.. 10,245 சிறப்பு பஸ்கள்.. தமிழக அரசு முடிவு
சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி சென்னையில் இருந்து சொந்து ஊருக்கு செல்ல 22,797 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வழக்கமாக 12,552 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதலாக 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னையில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை
தமிழர் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் தங்கி வசித்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தோடு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்..
குடும்பத்தோடு பலரும் ஊருக்கு செல்வதால் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அது மட்டும் இன்றி பஸ், ரயில்களில் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. இதனால் சிறப்பு பேருந்துகளை எதிர்பார்த்து பலரும் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளை ஒட்டி சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
10,245 சிறப்பு பஸ்கள்
அந்த வகையில் தமிழக அரசு சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிவில் மொத்தம் 22,797 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வழக்கமாக 12,552 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதலாக 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நாட்கள் வாரியாக சிறப்பு பஸ்கள்
* ஜனவரி 9 ஆம் தேதி மொத்தம் 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* ஜனவரி 10 ஆம் தேதி 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* ஜனவரி 11 ஆம் தேதி 255 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* ஜனவரி 12 ஆம் தேதி 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* ஜனவரி 13 ஆம் தேதி 2,790 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* ஜனவரி 14 ஆம் தேதி 2,920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
11 லட்சம் பேர் செல்வார்கள்
இது தொடர்பாக சிவசங்கர் மேலும் கூறுகையில், வரும் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கிட்டத்தட்ட சென்னையிலிருந்து 11 லட்சம் பேர் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வார்கள் என கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இயக்கப்படும். இதேபோன்று விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாகவும் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்" என்றார்.
புகார் தெரிவிக்க எண்கள்
மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 94450 14436 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்பான புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதேபோன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்" என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications