தொடர்ந்து அதிகரிக்கிறது.. தமிழகத்தில் மேலும் 273 பேருக்கு கொரோனா.. 31 மாவட்டங்களில் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 242 ஆக இருந்த நிலையில் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசின் தாக்கம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்களுக்கு சற்று அச்சத்தை கொடுத்துள்ளது. தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால், கொரோனா பரவலுக்கு கடிவாளம் போடும் வகையில் சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரொனா பரவல் அதிகரிப்பால் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளை தனிமைப்படுத்தும் நோக்கில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 273 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 273 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும், கன்னியாகுமரியில் 24 பேருக்கும், கோவையில் 19 பேருக்கும், சேலத்தில் 14 பேருக்கும் என 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,366 ஆக உள்ளது. 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications