கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு 2வது நாளாக எதிர்ப்பு! மஜக நிர்வாகிகள் -போலீஸார் இடையே தள்ளுமுள்ளு!
சென்னை: சர்ச்சைக்குரிய கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் 2வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணாநகர் வி.ஆர். மால் திரையரங்கை முற்றுகையிட வந்த மஜக நிர்வாகிகளை போலீஸார் தடுத்து நிறுத்திய போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

"தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை தடை செய்யk கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நேற்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில் சென்னை மாவட்ட மஜக சார்பாக, சென்னை - திருமங்கலத்தில் உள்ள VR மால் திரையரங்க முற்றுகைப் போராட்டம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
இதில் மஜக மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநிலத் துணைச் செயலாளர் அஸாருதீன், மெரினா போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ஜலீல் ஆகியோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்.
தொடர்ச்சியாக VR மால் திரையரங்கத்தை நோக்கி முன்னேற முயன்ற மஜக-வினரை போலீசார் தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்ல வலியுறுத்தினர். இருப்பினும் திரையரங்கை முற்றுகையிடுவோம் என மஜகவினர் முன்னேறிச் சென்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் பரபரப்பு பற்றிக்கொண்டது.

பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மஜக மாநில நிர்வாகிகள், தி கேரளா ஸ்டோரியை தடை செய்யும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்தனர்.
தி கேரளா ஸ்டோரியை தடை செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications