அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு பென்ஷன் கிடையாது.. உறுதி செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை : அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு பென்ஷன் பெற தகுதி கிடையாது என பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. திருமணம் ஆனவர். இவர் ஆரணியில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்.
இவர் தனது முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே அவரது சகோதரியை 2வதாக திருமணம் செய்தார். இதற்கு அவரது முதல் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பென்ஷன் கோரிய 2வது மனைவி
இந்நிலையில் தனுஷ்கோடி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2010ல் தனுஷ்கோடி மரணமடைந்தார். இதனால் பென்ஷன் தொடர்பாக பெறுவது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதையடுத்து, பென்ஷன் கேட்டு தனுஷ்கோடியின் 2வது மனைவி சாந்தி விண்ணப்பம் செய்தார். இதனை அக்கவுண்டன்ட் ஜெனரல் நிராகரித்து உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்தும், தனக்கு பென்ஷன் வழங்க உத்தரவிடக்கோரியும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் விசாரித்து வந்தார். இந்நிலையில் வழக்கில் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் 2வது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுக்கப்பட்டது சரியே என கூறியுள்ளார்.

உத்தரவில் கூறியது என்ன?
இதுதொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‛‛முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது பென்ஷன்தாரர் 1975ல் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அரசு ஊழியராக இருந்து கொண்டு இத்தகைய செயலில் ஈடுபடுவது தவறானது. சட்டப்படி, இந்த திருமணம் செல்லாது. அதனால், பென்ஷன் விதிகளின்படி, குடும்ப பென்ஷன் வழங்கும் கேள்வியே எழாது.

தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அதோடு குடும்ப பென்ஷன் வழங்க முடியாது. எனவே, பென்ஷன் விதிகளின்படி 2வது மனைவிக்கு குடும்ப பென்ஷன் மறுத்ததில் தவறு எதுவும் இல்லை'' என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் 2வது மனைவி சாந்தியின் பென்ஷன் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications