வலைதளத்தில் போட்டோ போடுபவரா? போலீஸ் தந்த வார்னிங்! மீறினால் 3 ஆண்டு சிறை OR ரூ.3 லட்சம் ஃபைன்
சென்னை: அனுமதியின்றி இன்னொருவரின் போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளார்.
சமூக வலைதளம்.. நாம் ஒவ்வொருவரும் தற்போது ஏராளமான சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், திரெட்ஸ் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம். இதுதவிர இன்னும் பல சமூக வலைதளங்களை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்தி வருகிறோம்.

இதில் பலரும் தங்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையிலான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக ஒருவருக்கு நடனம் வந்தால் அவர் தனது நடன வீடியோவையும், சிலருக்கு கவிதை, கதை எழுத தெரிந்தால் அதுசார்ந்த பதிவுகளையும், பாடல் பாட தெரிந்தால் அதுதொடர்பான வீடியோவையும் பதிவிடுகின்றனர்.
இன்னும் சிலர் தங்களின் ஓவியம், டிராவல், கைவினை பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு பதிவுகள் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ வெறுமனே சமூக வலைளதளங்களில் கணக்கு மட்டும் தொடங்கி வைத்துவிட்டு மற்றவர்களின் பதிவுகளை ரசிப்பது, கமெண்ட் செய்வது, லைக் செய்வது உள்ளிட்டவற்றை மட்டுமே மேற்கொண் வருகின்றனர்.
முந்தைய காலத்தை ஒப்பிடும்போது தற்போது நாம் அனைவருமே சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டோம். இத்தகைய சூழலில் தான் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் போட்டோக்களை குறிவைத்து சிலர் மோசடிகளை தொடங்குகின்றனர். வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் போட்டோக்களை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து பெண்களை மிரட்டும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
இதுதொடர்பாக பல புகார்கள் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது. இதனால் பெண்கள் வலைதளங்களில் போட்டோக்களை பதிவிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். இந்நிலையில் தான் தற்போது சென்னை பெருநகர காவல்துறை சார்பில் முக்கியமான வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது அனுமதியின்றி ஒருவரின் போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவோருக்கான எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 E படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதிவில் தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணும்(1930) காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பிரச்சனைகளை யாரேனும் சந்திக்கும்பட்சத்தில் 1930 எனும் தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications