ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்!
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள், செயலாளர்கள் தி.மு.க.வில் சேர்ந்துள்ளனர்.
ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த கட்சியிலும் சேரலாம் என்று ரஜினி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தி.மு.கவில் இணைந்தனர்
இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன், சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் இன்று தி.மு.க.வில் இணைந்தனர்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.கார்த்திகேயன், தருமபுரி மாவட்ட இணைச் செயலாளர் பி.செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகரச் செயலாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

தருமபுரி மாவட்டம்
இதேபோல் தருமபுரி மாவட்டம், மாவட்ட இணைச் செயலாளர் பி.செந்தில்குமார் தலைமையில் அரூர் ஒன்றியச் செயலாளர் ரஜினிமாறன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ்.பாபு, மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ரஜினிகாந்த், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பி.பானுமதி பெருமாள் உள்ளிட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

ரஜினி அறிக்கை
அப்போது தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., தருமபுரி மாவட்டக் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். உடல்நிலை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். மேலும், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த கட்சியிலும் சேரலாம் என்று ரஜினி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தினர் பலர் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.